புதுச்சேரி: பள்ளிகளில் பயன்படுத்திய பயனற்ற காகிதங்களை கொண்டு கலைப்படைப்புகளை அரசு பள்ளி குழந்தைகள் உருவாக்கியுள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான மரங்களையும், கிறிஸ்துமஸ் தாத்தாவையும் அரசு பள்ளி மாணவர்கள் வித்தியாசமான முறையில் இம்முறையும் உருவாக்கியுள்ளனர்.
புதுச்சேரியில் அரசு பள்ளி குழந்தைகள் வித்தியாசமான நுண்கலைகளை பயின்று வருகிறார்கள். கலைப்படைப்பை உருவாக்க அதிக பணம் தேவையில்லை இருக்கும் பொருட்களை வைத்து உருவாக்கலாம் என்று நுண்கலை ஆசிரியர் கிருஷ்ணா அறிவுறுத்தல்படி புதிய படைப்புகளை உருவாக்கியுள்ளனர்.
இதுபற்றி ஆசிரியர் கிருஷ்ணா, மாணவர்கள் கூறுகையில், ”ஒவ்வொரு பண்டிகைக்கும் புதிய படைப்புகளை பள்ளியில் இருக்கும் தேவையற்ற காகிதங்களை உருமாற்றி அமைப்போம். அனைத்து மதங்களும் ஒன்றே. அப்படி கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு 12 அடி உயரத்தில் பள்ளியில் கிடைக்கும் தேவையற்ற 20 கிலோ காகிதங்களை கொண்டு உருவாக்கினோம். அதைத் தொடர்ந்து 30 கிலோ காகிதங்களை கொண்டு நான்கு அடியில் கிறிஸ்துமஸ் தாத்தா அமைத்தோம்.
கிறிஸ்துமஸ் மரத்தில் டீ கப் வைத்து பெல் உருவாக்கினோம். காகிதங்களை சுருட்டி பால்களை உருவாக்கி வர்ணம் தீட்டினோம். அட்டைபெட்டி, தேவையற்ற பேப்பர் ஆகியவற்றைப் பயன்படுத்தி இவ்வாறு உருவாக்கினோம். தற்போது ஆர்ட் கேலரியில் எங்கள் படைப்புகளை வைத்துள்ளோம். 15 மாணவர்கள் ஒன்றிணைந்து ஒரு வார முயற்சியில் இப்படைப்புகளை உருவாக்கினோம். தேவையற்ற எதையும் கலைப் பொருட்களாக மாற்றலாம்.
இதற்கு செயற்கை வண்ணங்களை நாங்கள் பயன்படுத்தவில்லை. இயற்கை வண்ணங்களை தான் பயன்படுத்தினோம். ஏற்கெனவே விநாயகர் சதுர்த்தியில் இதுபோல் சிலை வடிவமைத்தோம். தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி இப்படைப்பை உருவாக்கியுள்ளோம்” என்றனர்.