சென்னை: அரசு மருத்துவமனைகளில் மஞ்சள் காமாலை தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்கிட வேண்டும் என்று டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,"மஞ்சள் காமாலை (Hepatitis-B Vaccine) தடுப்பூசி மஞ்சள் காமாலை வைரஸ் தொற்றை தடுப்பதுடன், அது தொடர்பான கல்லீரல் நோய்களை, கல்லீரல் புற்றுநோயை தடுக்கும் மிக முக்கியமான தடுப்பூசி ஆகும். தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மஞ்சட் காமாலை தடுப்பூசி கடந்த ஆறு மாதங்களாக தட்டுப்பாடாக உள்ளது என்ற செய்தி வெளி வருகிறது.
இதனால் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏழை நோயாளிகள் பாதிப்புக்குள்ளாகிறார்கள். குறிப்பாக சிறுநீரக மருத்துவப் பிரிவுகளில் ஹீமோ டயாலிசிஸ் (Hemo Dialysis) என்ற ரத்த சுத்திகரிப்பு செய்து கொள்ளும் நோயாளிகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியம் இருக்கின்றது. இந்நிலையில் இத்தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக, ஹீமோ டயாலிசிஸ் (Hemo Dialysis) செய்து கொள்ளும் நோயாளிகளுக்கு இத்தடுப்பூசியை செலுத்த முடியாத நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் நோயாளிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் போதிய அளவு மஞ்சட் காமாலை தடுப்பூசியை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மத்திய மற்றும் மாநில அரசுகளை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது” என்று கூறியுள்ளார்.