செங்கல்பட்டில் பல்வேறு இடங்களில் கனமழை: புதுப்பட்டினம் மீனவர் பகுதியில் மர்ம படகு கரை ஒதுங்கியது


புதுப்பட்டினம் மீனவர் பகுதி கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்மபடகு.

கல்பாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் உள்ள கிராமங்களில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்ய தொடங்கிய நிலையில், சில மணி நேரத்திற்குப் பிறகு வெங்கம்பாக்கம், மாமல்லபுரம், பூஞ்சேரி, சதுரங்கப்பட்டினம், கல்பாக்கம் ஆகிய பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்ததால் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினர்.

மேலும், கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் உள்ள கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால், மீன்வளத்துறையின் அறிவிப்பு காரணமாக மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. மேலும், செங்கல்பட்டு மாவட்ட முழுவதும் 2,500-க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் கரையில் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, புதுப்பட்டினம் மீனவர் பகுதியில் உள்ள கடற்கரையில் மர்ம படகு ஒன்று கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த படகில் புத்தர் படம் மற்றும் சில கண்ணாடி பொருட்கள் இருந்ததாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த சதுரங்கப்பட்டினம் போலீஸார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் படகை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

x