சென்னை: பைக் டாக்சிகளுக்கு தடை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை, போக்குவரத்து ஆணையரகத்தில் ‘உரிமைக்குரல்’ உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக விதிமீறும் பைக் டாக்சிகள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் போக்குவரத்து ஆணையர் சுன்சோங்கம் ஜடக் சிரு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.
இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கரிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அப்போது அமைச்சர் கூறியதாவது: மத்திய அரசு ஏற்கெனவே இருசக்கர வாகனத்தை வாடகை அடிப்படையில் இயக்க அனுமதி வழங்கியிருக்கிறது. இதுகுறித்து ஆய்வு செய்ய தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில் எதிர்ப்பும் இருக்கிறது. விபத்து நேரிட்டால் காப்பீடு பெறுவதில் சிக்கல் எழுகிறது. எனவே, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து போக்குவரத்துத் துறையின் நஷ்டம் குறித்த கேள்விக்கு, “டீசல் விலை உயர்ந்தபோதும், அரசு பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அண்டை மாநிலங்களில் கி.மீ-க்கு ரூ.1.08 வசூலிக்கப்படுகிறது. இங்கு 52 காசு மட்டுமே வசூலிக்கப்படுகிறது. எனவே, நஷ்டம் வருவது இயற்கை. அதை அரசு ஈடு செய்கிறது” என்றார். முன்னதாக வாரிசு நியமன ஆணைகளை வழங்கிய அமைச்சர், மோட்டார் வாகன பராமரிப்புத் துறையை கணினிமயமாக்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.