நடிகர் வடிவேலுவுக்கு எதிராக அவதூறு கருத்து பேச மாட்டேன்: நடிகர் சிங்கமுத்து உத்தரவாதம்


நடிகர் வடிவேலுவுக்கு எதிராக வாய்மொழியாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ, டிஜிட்டல் வடிவிலோ எந்தவொரு அவதூறு கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என நடிகர் சிங்கமுத்து தரப்பில் உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யூ-டியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தன்னைப்பற்றி அவதூறாக பேசியுள்ளதாகக் கூறி நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தன்னைப்பற்றி அவதூறாக பேசக்கூடாது என சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார். கடந்தமுறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வடிவேலுவுக்கு எதிராக எந்த அவதூறு கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என உத்தரவாதம் அளித்தும், ஏற்கெனவே தெரிவித்த கருத்துக்களை திரும்பப் பெறுவதாகவும் மனுதாக்கல் செய்ய நடிகர் சிங்கமுத்துவுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் சிங்கமுத்து தரப்பில், இனி நடிகர் வடிவேலுவுக்கு எதிராக வாய்மொழியாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ, டிஜிட்டல் வடிவிலோ எந்தவொரு அவதூறு கருத்தும் தெரிவிக்கமாட்டேன் என உத்தரவாதம் அளித்து மனு தாக்கல் செய்யப்பட்டது. அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை வரும் ஜன.21-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

x