திருவண்ணாமலை தீப திருவிழாவின்போது, பக்தர்கள் மலை மீது ஏற அனுமதி கிடையாது என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலில் உள்ள பெரியாண்டவருக்கு ஆனந்தகுமார் என்ற உபயதாரர் 12 கிலோ வெள்ளி கவசத்தை வழங்கி உள்ளார். சென்னையி்ல் நேற்று நடந்த நிகழ்வில் இந்த கவசத்தை கோயில் நிர்வாகத்திடம் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
புதிய தேர் செய்வதற்காக சென்னை பாரிமுனை காளிகாம்பாள் கோயிலுக்கு 210 கிலோ வெள்ளி, திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு 100 கிலோ வெள்ளியை உபயதாரர்கள் வழங்கி உள்ளனர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு ரூ.1 கோடி மதிப்பி்லான வைர கிரீடம் உபயதாரர்களால் வழங்கப்பட உள்ளது.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, உபயதாரர்கள் மட்டும் கோயில்களுக்கு ரூ.1,185 கோடி நன்கொடை வழங்கி உள்ளனர். நிலுவையில் இருந்த வாடகை ரூ.900 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. பயன்பாட்டில் இல்லாத தங்க நகைகள், பொருட்களை உருக்கி, தங்க கட்டிகளாக மாற்றி முதலீடு செய்ததன்மூலம், 13 கோயில்களுக்கு வட்டி தொகையாக ரூ.5 கோடி கிடைக்கிறது. அதேபோல, பழநி, சமயபுரம் உள்ளிட்ட 10 கோயில்களில் உள்ள சுமார் 700 கிலோ தங்க நகைகள் விரைவில் மும்பையில் உள்ள மத்திய அரசின் தங்க உருக்காலையில் உருக்கப்பட்டு, முதலீடு செய்யப்படும். இதன்மூலம் ரூ.10 கோடி வரை வட்டி தொகை கிடைக்கும்.
சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக திருவண்ணாமலை மலையில் மண் சரிவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 8 பேர் குழுவினர் கடந்த 7, 8, 9-ம் தேதிகளில் மலையில் களஆய்வு செய்தனர். அவர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையி்ல், 350 கிலோ எடை கொண்ட கொப்பரை, திரிகள், முதல் நாளில் 40 டின்கள் மூலம் 600 கிலோ நெய், பிற நாட்களில் தேவைக்கேற்ப தீபத்துக்கான நெய் ஆகியவற்றை மலை உச்சிக்கு எடுத்து செல்ல தேவைப்படும் மனித சக்தி, காவல் துறையினர், வனத் துறையினர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் மலை மீது ஏற அனுமதி கிடையாது.
இந்த ஆண்டு திருவண்ணாமலை தீப திருவிழாவில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தீப திருநாளன்று கோயிலுக்குள் செல்ல சிறப்பு அனுமதி சீட்டு கட்டாயம். அது இல்லாதவர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.