கோவை: ‘தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று பாடி வியப்பை ஏற்படுத்திய பாரதி, வியப்புகளின் திறவுகோல் மட்டுமல்ல, வியப்புகளின் கருவூலம் பாரதியார் என, கோவை பாரதியார் பல்கலை வளாகத்தில் நடந்த விழாவில் பேராசிரியர் ராஜேந்திரன் பேசினார்.
மகாகவி பாரதி பிறந்தநாளை முன்னிட்டு காணிநிலம் மகாகவி பாரதியார் உயராய்வு மையப் படைப்புகள் வெளியீடு மற்றும் இளம்பாரதி விருது வழங்கும் விழா கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடந்தது. நிகழ்வின் தொடக்கமாக இசை மற்றும் நாட்டிய பேழைகள் வெளியிடப்பட்டன.
தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், தமிழ்நாடு பொது நூலக சட்ட திருத்த உயர்நிலைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ம.ராஜேந்திரன் பேசும் போது, மகாகவி பாரதியார் வாழ்வும் படைப்பும் எனக்குள் பல வியப்புகளை ஏற்படுத்துகின்றன. குயிலின் காதலை தெய்வீகக் காதலாக உருவகித்து பாடியதும் மனிதர்களை காட்டிலும் குரங்கின் செயல்திறனை பாடியதும் எனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது. தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பாடி வியப்பை ஏற்படுத்திய பாரதி என்றென்றும் வியப்புகளின் திறவுகோல் மட்டுமல்ல, கருவூலமும் அவர்தான். என்றார்.
பாரதியார் பல்கலை துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் லவ்லினா லட்டில் ஃபிளவர் தலைமை வகித்தார். பேராசிரியர் அஜித்குமார் லால் மோகன், சிஏ.வாசுகி, ஆட்சிக்குழு உறுப்பினர் அருந்ததி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக பல்கலை பதிவாளர்(பொறுப்பு) ரூபா குணசீலன் வரவேற்றார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருது, கேடயம், பதக்கம், பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ்துறை தலைவர் சித்ரா நன்றி கூறினார்.