27 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில், இலங்கை - தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, வியாழக்கிழமை அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
500 மின்சார பேருந்துகள் வாங்க டெண்டர் அறிவிப்பு: சென்னை, மதுரை, கோவைக்கு 500 தாழ்தள மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்வது தொடர்பான டெண்டர் அறிவிப்பை தமிழக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. 500 மின்சார பேருந்துகளில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 320 குளிர்சாதன பேருந்துகளும், கோவைக்கு 20 குளிர் சாதனம், 60 குளிர்சாதன வசதியில்லா பேருந்துகளும், மதுரைக்கு 100 குளிர்சாதன வசதியில்லா பேருந்துகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
‘தி.மலையில் பக்தர்கள் மலையேற அனுமதி இல்லை’ - திருவண்ணாமலையில் மகா தீப தினத்தன்று, மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பரணி தீபத்துக்கு மட்டும் 300 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கர்நாடகா எழுத்தாளருக்கு வைக்கம் விருது: 2024-ம் ஆண்டுக்கான வைக்கம் விருது, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தேவநூர மஹாதேவா-வுக்கு வழங்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தங்க முலாம் பூசிய பதக்கம் தமிழக முதல்வரால் வைக்கத்தில் வியாழக்கிழமை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
சபாநாயகர் ஓம் பிர்லாவுடன் ராகுல் காந்தி சந்திப்பு: சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்துப் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனக்கு எதிரான அவதூறான கருத்துகளை நீக்குமாறும், அவை சுமுகமாக நடப்பதை உறுதிப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்தார். முன்னதாக, மக்களவையில் காங்கிரஸ் துணைத் தலைவர் கவுரவ் கோகோய், ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே பேசிய அவதூறு கருத்துகளை பதிவிலிருந்து நீக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இண்டியா கூட்டணி எம்பி.க்கள் நூதன போராட்டம்: அதானி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தும் நோக்கில் இண்டியா கூட்டணி எம்பிக்கள், பாஜக எம்பிக்களுக்கு ரோஜா பூ மற்றும் தேசியக் கொடியை பரிசளித்தனர். நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக வாசலில் குழுமிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இண்டியா கூட்டணி எம்பிக்கள், நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த பாஜக எம்பிக்களுக்கு ரோஜா பூ மற்றும் தேசியக் கொடியை பரிசளித்தனர். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு ராகுல் காந்தி ரோஜா பூ மற்றும் தேசியக் கொடியை பரிசளித்தார்.
‘தேர்தலை தனித்தே எதிர்கொள்வோம்’- கேஜ்ரிவால்: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை தனித்தே எதிர்கொள்ளப் போவதாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆம் ஆத்மி வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்ளக் கூடும் என்ற ஊகங்கள் எழுந்த நிலையில், அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கேஜ்ரிவால் தனித்துப் போட்டி என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
சிரியாவில் இருந்து 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு: சிரியாவில் கிளர்ச்சிக்குப் பின்னர் அங்கிருந்து முதல்கட்டமாக 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இரண்டு நாட்களில் தங்கம் விலை ரூ.1,240 உயர்வு: சென்னையில் இரண்டு நாட்களில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,240 உயர்ந்து நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.7,285-க்கும், பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.58,280-க்கும் விற்பனையானது.
டிச.24-ல் பாமக ஆர்ப்பாட்டம்: ராமதாஸ் அறிவிப்பு: வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், வட்டத் தலைநகரங்களிலும் பாமக சார்பில் டிசம்பர் 24-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் நகரில் நடைபெறும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையேற்று நடத்துவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மழை முன்னெச்சரிக்கை தீவிரம்: புதுச்சேரியில் மீண்டும் தொடர் கனமழை பெய்து வருகிறது. ஏற்கெனவே அங்குள்ள ஏரி, குளங்கள் நிரம்பிய நிலையில் உள்ளதால் தொடர் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.