வள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை இணைப்பு பாலத்தால் கன்னியாகுமரி மேலும் பிரபலமாகும்: மத்திய நிதிக்குழு தலைவர் தகவல் 


16வது நிதிக்குழு தலைவர் அரவிந்த் பனகாரியா உடன் குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா.

நாகர்கோவில்: திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை இடையே இணைப்பு பாலத்தால் கன்னியாகுமரி மேலும் பிரபலமாகும் என்று மத்திய அரசின் 16வது நிதிக்குழு தலைவர் அரவிந்த் பனகாரியா தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை இடையே இணைப்பு பாலம் நடைமுறைக்கு வந்ததும், உலக மக்கள் அனைவருக்கும் கன்னியாகுமரி சுற்றுலா தலம் இன்னும் அதிகளவு பிரபலமாகும் என 16வது நிதிக்குழு தலைவர் அரவிந்த் பனகாரியா தெரிவித்தார். கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முதல் விவேகானந்தர் பாறை இடையே சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி இழை கூண்டு பாலத்தினை 16வது நிதிக்குழு தலைவர் அரவிந்த் பனகாரியா, குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமையில் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் தெரிவிக்கையில், “முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் முத்தமிழறிஞர் கலைஞரால் 2000-ம் ஆண்டு நிறுவப்பட்டு தற்போது வெள்ளி விழா காண இருக்கும் அய்யன் திருவள்ளுவர் சிலையும் விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் கடல்சார் நடைபாதை பாலப்பணிகள் ரூ.37 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இப்பாலத்தின் நீளம் 77 மீட்டர் மற்றும் அகலம் 10 மீட்டர் கொண்ட பவ்ஸ்ட்ரிங் ஆர்ச் பாலம் ஆகும். இது நவீன தொழில் நுட்பத்தில் கடல் அரிப்பு, கடல் காற்றின் வேகம் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது விவேகானந்தர் பாறையினை கண்டுகளிக்கும் சுற்றுலா பயணிகள் மீண்டும் படகு மூலம் அய்யன் திருவள்ளுவர் சிலையினை காண செல்வதால் அதிக நேரம் விரயமாகின்றது. இந்நடைபாலம் அமைக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் எளிதாக அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு செல்லலாம். இதனால் கடலின் அழகினை சுற்றுலா பயணிகள் நடந்தவாறே கண்டு ரசித்து மகிழலாம். மேலும் இத்திருவள்ளுவர் சிலை கல் மண்டபத்தில் பதிக்கப்பட்டுள்ள திருக்குறள் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் அமைக்கப்பட்டு இருப்பது உலகில் உள்ள அனைவரும் திருக்குறளை அறிந்து கொள்ள ஏதுவாக உள்ளது. இதன்மூலம் திருக்குறள் உலக பொதுமறை என்று சொல்வது நிரூபணம் ஆகியுள்ளது.

கடல்நடுவே அமையும் கண்ணாடி இழை கூண்டு பாலம்.

கன்னியாகுமரி சுற்றுலா தலத்திற்கு வரும் வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்கள் மற்றும் உள்ளுர் சுற்றுலா பயணிகள் இதுவரை விவேகானந்தர் பாறைக்கு சென்று பார்வையிடுவதோடு, விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்து கொண்டு திரும்புவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. தற்போது விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலைக்கு கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்கப்படுவதால் விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் இப்பாறையிலிருந்து கூண்டுப்பாலம் வழியாக திருவள்ளுவர் சிலையினை பார்வையிட்டு செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதை வரும் டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1ந் தேதி அன்று நடைபெறும் அய்யன் திருவள்ளுவர் சிலை 25ம் ஆண்டு வெள்ளி விழாவின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவுள்ளார். இந்நிகழ்ச்சியானது உலகம் முழுவதும் கண்டு களிக்கும் விதமாக அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இணைப்பு பாலம் வாயிலாக உலக மக்கள் அனைவருக்கும் கன்னியாகுமரி சுற்றுலா தலம் இன்னும் அதிகளவு பிரபலமாகும்.

அத்துடன் உலகமெங்கிலும் இருந்து சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வந்து இவ்வெழில்மிகு காட்சியினை கண்டுகளிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அய்யன் திருவள்ளுவர் சிலை 25ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சிக்காக சிறப்பான பணிகளை மேற்கொண்டு வரும் மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை அலுவலர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் ” என்றார்.

x