சென்னை: சென்னை, மதுரை, கோவைக்கு 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் அறிவிப்பை தமிழக போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக சாலை போக்குவரத்து நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தமிழகத்தின் பிரதான நகரங்களில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பேருந்துகளை இயக்கும் வகையில் கேஎப்டபிள்யு வங்கியுடன் தமிழக அரசு நிதி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, 12 மீட்டர் நீளம் கொண்ட குளிர்சாதன வசதி மற்றும் குளிர்சாதன வசதியில்லாத தாழ்தள மின்சார பேருந்துகளைக் கொள்முதல் செய்து வழங்க சர்வதேச அளவில் அழைப்பு விடுக்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தில் தேர்வாகும் நிறுவனங்களே 500 தாழ்தள மின்சார பேருந்துகளை தயாரித்து வழங்குவதோடு, இயக்குதல் மற்றும் பராமரித்தல் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். அதனடிப்படையில் நிறுவனங்கள் தரப்பிலான ஒட்டுநர்களே பேருந்தை இயக்க வேண்டும். இதில் விருப்பமுள்ள நிறுவனங்கள், இணையவழியில் பிப்.5ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து, பிப்.7ம் தேதிக்குள் காகித வடிவிலான விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.tntenders.gov.in என்ற இணையதளத்தை காணலாம்’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது