புதுச்சேரி: பிரதமர் புதுச்சேரி மாநிலத்தை புறக்கணிக்கிறார்; இங்குள்ள ஆட்சியாளர்களை அலட்சியம் செய்கிறார் என்று புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர்கள் பெத்தபெருமாள், ஷாஜகான் உள்ளிட்டோர் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை இன்று ராஜ் நிவாஸில் சந்தித்து மனு அளித்தனர். பின்னர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''ஃபெஞ்சல் புயலால் வரலாறு காணாத வகையில் பெய்த கனமழையால் புதுச்சேரியில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு முன்னெச்சரிக்கையான நடவடிக்கை எடுக்காததால் பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டிருக்கிறது. முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ள அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் மிகவும் குறைவு. ஆகவே அதனை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.
விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம் அறிவித்துள்ளார். அதனை ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மீனவர்கள் 10 நாட்கள் கடலுக்கு செல்லவில்லை. மீனவர்களுக்கு நிவாரண உதவியை ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் அறிவித்த இரண்டு நாட்களில் நிவாரணம் கொடுத்துவிட்டனர். புதுச்சேரியில் 10 நாட்கள் ஆகியும் இன்னும் கொடுக்கப்படவில்லை. சிறு கடைகள் போன்றவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் பெற்ற கடன் தொகையை கட்டுவதற்கான காலக்கெடுவை வங்கிகள் நீட்டிக்க வேண்டும். புதுச்சேரியில் அறிவிப்பு முதல்வராக மட்டும் ரங்கசாமி இருந்து வருகிறார், அது கூடாது. மக்களின் வாழ்க்கையில் முதல்வர் விளையாட வேண்டாம்.
முதல்வர் ரங்கசாமி டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து, புதுச்சேரி மாநிலத்தில் மிகப்பெரிய புயல் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி மாநில மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க வேண்டும். தமிழக முதல்வரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் புயல் வெள்ளம் குறித்து கேட்டறிந்துள்ளார்.
ஆனால் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை பிரதமர் கண்டுகொள்ளவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறியவில்லை. இந்த ஆட்சியாளர்களை பிரதமர் நரேந்திரமோடி அலட்சியம் செய்கிறார். புதுச்சேரி மாநிலத்தை பிரதமர் புறக்கணிக்கிறார்.
இங்குள்ள பாஜகவும், இந்த அரசோடு ஒத்துழைக்காமல் மாநில மக்களை வஞ்சிக்கிறது. இந்த நிலை நீடிக்கக்கூடாது. நிறைய படுகை அணைகளை கட்ட வேண்டும். தண்ணீரை சேமிக்க வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பு முன்னறிவிப்பு கொடுக்கவில்லை. ஆகவே இப்போது ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு இந்த அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.'' என்றார்.
தொடர்ந்து அவர் கூறும்போது, ''முதல்வர் ரங்கசாமி பொய்சொல்ல அஞ்சமாட்டார். நடக்காத ஒன்றை நடந்தது என்று சொல்வார். விவரமே தெரியாத ஒரு முதல்வரை புதுச்சேரியில் நாம் கொண்டுள்ளோம். மத்திய குழுவினரின் அறிக்கை உள்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்றுவர தாமதமாகும். ஆகவே புதுச்சேரி அரசு உடனடியாக மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். புதுச்சேரியின் இரட்டை எஞ்சின் ஆட்சியின் நிலைதான் இது. ஒருபுறம் மோடியும், மறுபுறம் ரங்கசாமியும் இழுப்பதால் ரயில் அங்கேயே நிற்கிறது.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.