புதுச்சேரி: ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்காக ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் தர ரூ.177 கோடி நிவாரண கோப்புக்கு துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அனுமதி தந்துள்ளார்.
புதுவையில் ஃபெஞ்சல் புயலால் பாதித்த அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி கடந்த 2ம் தேதி அறிவித்திருந்தார். இத்தொகை எப்போது கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த நிவாரண நிதிக்கான கோப்பு நிதித்துறை மூலம் துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கோப்புக்கு துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அனுமதி அளித்துள்ளார்.
இதன்படி மாஹே பிராந்தியத்தை தவிர்த்து, புதுவை, காரைக்கால், ஏனாமை சேர்ந்த 3.54 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.177 கோடியே 36 லட்சத்து 30 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட உள்ளது. ஆளுநர் அனுமதி அளித்துள்ளால் தலா ரூ.5 ஆயிரம் நிவாரண நிதி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.
இந்நிலையில் குடிமைப் பொருள் வழங்கல் துறை இயக்குநர் சத்தியமூர்த்தி இன்று பிறப்பித்த உத்தரவில் புயல் பாதிப்பு அரசு நிவாரணம் 3.54 லட்சம் ரேஷன் அட்டைத் தாரர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இதற்கு ரூ.177 கோடி ஒப்புதல் தரப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.