கடலூர்: கடலூர் மத்திய சிறைச் சாலையில் மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்திய விடுதலைக்காக தனது எழுத்துக்கள் மூலம், மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியவர் மகாகவி பாரதியார். அவரை ஆங்கிலேய அரசு கைது செய்ய முயன்றபோது பாரதியார், பிரெஞ்சு ஆட்சிக்குள் இருந்த புதுவைக்கு வந்து, தனது எழுச்சிமிகு எழுத்துப் பணியைச் செய்துவந்தார். இந்த நிலையில் ஒருமுறை தமிழகப் பகுதிக்கு வந்த பாரதியாரை ஆங்கிலேய அரசு கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தது.
பாரதியார் கடலூர் சிறையில் 20-11-1918 முதல் 14-12-1918 வரை 25 நாட்கள் சிறையில் இருந்தார். இதனால் பாரதியாருக்கு கடலூர் மத்திய சிறை காலையில் வளாகத்தில் சிலை வைக்கப்பட்டு உள்ளது.மேலும் பாரதியார் அடைக்கப்பட்டு இருந்த அறை நூலகமாக மாற்றப்பட்டு உள்ளது. பாரதியார்143 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (டிச.11) கடலூர் மத்திய சிறை வளாகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு சிறை அலுவலர் ரவி, துணை சிறை அலுவலர் பிரகாஷ் மற்றும் சிறைத்துறை அலுவலர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் சிறைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்