இன்றும் நாளையும் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு: வெதர்மேன் அலெர்ட்!


வங்கக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் இன்று டிசம்பர் 11ம் தேதி மேற்கு-வடமேற்கு திசையில் இலங்கை - தமிழக கடலோரப் பகுதியை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பல இடங்களில் இன்று முதல் அடுத்து வரும் 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சில மாவட்டங்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் மழை தொடங்கி அடுத்த 3 நாள்களுக்கு மழை பெய்யும். குறிப்பாக டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் அதிக மழை பெய்யும்.

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தெற்கு இலங்கையிலிருந்து மன்னார் வளைகுடா, தென் தமிழகம் வழியே கேரளத்தை சென்றடையும். உள் தமிழகம் மற்றும் மேற்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று பகலில் தொடங்கி மாலை, இரவில் தீவிரமடையும். இன்றும் நாளையும் சென்னையில் கனமழை பெய்யக்கூடும். அதி கனமழைக்கு வாய்ப்பில்லை.

புதுவை, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு நகரும் போது, டெல்டா மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். இந்த புயல் சின்னத்துக்கு டெல்டா மாவட்டங்கள் தான் ஹாட் ஸ்பாட். அடுத்த மூன்று நாள்களுக்கு கண்டிப்பாக கொடைக்கானல் மற்றும் குன்னூருக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

கேரளத்தில் உள்ள அரபிக் கடலை புயல் சின்னம் அடையும் போது இந்த பகுதிகளின் பள்ளத்தாக்குகளில் தீவிர மழை பெய்யும். ஒட்டுமொத்த உள் தமிழக மாவட்டங்கள், கோவை மற்றும் நீலகிரியில் கனமழை பெய்யும். சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இங்குள்ள மலைப் பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, பெங்களூரு பகுதிகளில் நல்ல மழை பெய்யும்.

மேலும் மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட தென் தமிழகத்தில் 2 அல்லது 3 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும். தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரியில் மிதமான மழை பெய்யக்கூடும். புயலுக்கான வாய்ப்பு இல்லை. டெல்டா, மேற்கு மலைப் பகுதிகள் மழைக்கான ஹாட் ஸ்பாட்" என பதிவிட்டுள்ளார்.

x