கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கம் நகரில் தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை திறந்து வைப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கேரளா செல்கிறார்.
இது தொடர்பாக கேரள மாநில திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கம் நகரில் நாளை டிசம்பர் 12-ம் தேதி காலை 10 மணியளவில் தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இன்று காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நெடும்பாசேரி விமான நிலையம் சென்றடைகிறார்.
அங்கு அவருக்கு கேரள மாநில திமுக சார்பில் கேரள பாரம்பரிய முறையில் செண்டை மேளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் கேரள மாநில திமுக அமைப்பாளர் கே.ஆர்.முருகேசன் தலைமையில் தமிழக அரசின் நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கேரள மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் அனைத்து அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.