செந்தில் பாலாஜி, ஜாபர் சாதிக் வழக்குகளில் ஆஜராகி வரும் அமலாக்க துறை சிறப்பு அரசு வழக்கறிஞர் பதவி காலம் நீட்டிப்பு


சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஜாபர் சாதிக் ஆகியோருக்கு எதிரான வழக்குகளில் அமலாக்கத் துறை சார்பில் ஆஜராகி வரும் சிறப்பு அரசு வழக்கறிஞரான என்.ரமேஷின் பதவிக்காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 3 மோசடி வழக்குகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பதிவு செய்திருந்தனர். அந்த வழக்குகளின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் கடந்தாண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் நீண்ட சட்டப்போராட்டத்துக்குப் பிறகு செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அவருக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதேபோல போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் மற்றும் அவரது தம்பி முகமது சலீம் ஆகியோரையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

முக்கியமான இந்த இரு வழக்குகளிலும் அமலாக்கத் துறை தரப்பி்ல் சிறப்பு அரசு வழக்கறிஞராக என்.ரமேஷ் ஆஜராகி வருகிறார். இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழான பல்வேறு வழக்குகளின் விசாரணைக்கு அமலாக்கத் துறை தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞராக ஆஜராகி வரும் என்.ரமேஷின் பதவிக்காலத்தை வரும் 2027 மார்ச் 14 வரை நீட்டித்து மத்திய நிதித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதேபோல தமிழகத்தில் அமலாக்கத் துறை தரப்பு சிறப்பு வழக்கறிஞர்களான பி.சித்தார்த்தன், எஸ்.சசிக்குமார், ரஜினிஸ் பதியில், சிபி விஷ்ணு, என்.விநாயகம், வி. பாரிவள்ளல் ஆகியோரது பதவிக்காலமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

x