செம்பரம்பாக்கம் ஏரி, சாத்தனூர் அணை திறந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் நேற்று கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.
பி.தங்கமணி (அதிமுக): மத்திய நிதியமைச்சர், மாநிலங்களுக்கு நிதி கொடுத்துள்ளதையும் தமிழகத்தில் அமைச்சர் தவறான தகவலை சொல்வதாகவும் கூறியிருக்கிறார். அவர்கள் சொல்வது உண்மையா, நீங்கள் சொல்வது உண்மையா, ஃபெஞ்சல் புயல் மழை வெள்ளத்தால் கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி 5 மாவட்டங்களுக்கு வானிலை மையம் ரெட் அலர்ட் கொடுத்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களுக்கு சொல்லியிருந்தால், இந்த அளவுக்கு பாதிப்பு இருந்திருக்காது. செம்பரம்பாக்கத்தில் யாருக்கும் சொல்லாமல் 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்துவிட்டதாக எங்கள் மீது குற்றச்சாட்டு சொன்னீர்கள். சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது குறித்து மக்களுக்கு சரியான தகவலை சொல்லியிருந்தால், இந்த அளவுக்கு பாதிப்பு வந்திருக்காது. திருவண்ணாமலையில் 7 பேர் இறப்புக்கு ரூ.5 லட்சம் கொடுத்திருக்கிறீர்கள். கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் ரூ.10 லட்சம் கொடுக்கிறீர்கள். நிவாரணம் கொடுப்பதில் என்ன அளவுகோள் வைத்துள்ளீர்கள். கூடுதலாக ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும்.
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்: நீங்கள் சென்னையில் திறந்துவிட்டதைபோல் உடனடியாக இல்லாமல், சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்துவிடுவதற்கு முன் 5 முறை எச்சரிக்கை கொடுத்திருக்கிறோம்.
அமைச்சர் பொன்முடி: கணக்கெடுப்பு பணி முடிந்து விரைவில் விவசாயிகளுக்கும், குடிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: கனமழை பெய்யும்போது, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 29 ஆயிரம் கனஅடி தண்ணீர்தான் திறக்க முடியும். அதற்கு மேல் திறக்க முடியாது. ஆனால், சாத்தனூர் அணையில் இருந்து அதிகாலை 2.45 மணிக்கு அறிவிப்பு கொடுத்துவிட்டு, 3 மணிக்கு தண்ணீர் திறந்துள்ளீர்கள். இதனால்தான் பாதிப்பு அதிகமானது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திடீரென்று தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. செம்பரம்பாக்கம் ஏரிக்கு கீழே 100 ஏரிகள் உள்ளன. கனமழை பெய்யும் போது, அந்த ஏரிகளில் நீர்நிரம்பி உபரி வெளியேறி அடையாற்றில் கலந்ததால்தான் பாதிக்கப்பட்டது.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: செம்பரம்பாக்கம் ஏரியை சொல்லாமல் திறந்துவிட்டதால்தான் பாதிப்பு ஏற்பட்டது. சென்னையே மூழ்கியது. 240 பேருக்கும் மேல் இறந்தனர். ஆனால், சாத்தனூர் அணை 5 முறை எச்சரிக்கை கொடுக்கப்பட்டு, படிப்படியாக தண்ணீர் திறக்கப்பட்டது. அதனால்தான் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.
பழனிசாமி: அடையாற்றில் 1 லட்சம் கனஅடி தண்ணீர் சென்று கடலில் கலக்கலாம். செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 29 ஆயிரம் கனஅடி தான் திறக்க முடியும். அது எப்படி பாதிக்கும்.
முதல்வர் ஸ்டாலின்: யாரிடம் அனுமதி வாங்குவது என்று தெரியாமல், செம்பரம்பாக்கம் ஏரியில் யாருக்கும் சொல்லாமல், தெரியாமல் அதிகாரிகள் தண்ணீர் திறந்துவிட்டனர். அதுதான் பிரச்சினை. அதற்கு பதில் சொல்லாமல், வாழைப்பழம் கதை மாதிரி பேசுகிறீர்கள். ஆடிட்டிங் ரிப்போர்ட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிஏஜி அறிக்கையில் உயிரிழப்புக்கு காரணம் மனித தவறு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்: அடையாற்றில் 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்தாலே, ஆற்றங்கரையோரம் உள்ள 7 தொகுதிகள் பாதிக்கும். 1 லட்சம் கனஅடி தண்ணீர் போகும் என்ற சவாலை நீங்கள் ஏற்க தயாராக இருந்தால், நிபுணர்களையும் அழைத்து ஆய்வு செய்வோம். நீங்களும் வாருங்கள்.
அமைச்சர் சேகர்பாபு: முன்னறிவிப்பு இல்லாமல் திறக்கப்பட்டதால்தான் 280-க்கும் மேல் உயிரிழப்பு ஏற்பட்டது.
பழனிசாமி: 280 உயிர்கள் போனதாக எந்த அடிப்படையில் சொல்கிறார். அதை விளக்க வேண்டும். பொய்யை திரும்ப திரும்ப பேசி மெய் என்று நிரூபிக்க முடியாது.
அமைச்சர் தா.மோ. அன்பரசன்: செம்பரம்பாக்கம் ஏரியின்கீழ் 100 ஏரிகள் எங்கே இருக்கிறது? இவ்வாறு விவாதம் நடைபெற்றது.