அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையை ஆதரிக்க பாமக தயார். அதேபோல, மின் வாரிய ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தமிழக அரசு தயாரா என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய சூரியஒளி மின் உற்பத்திக் கழகத்திடமிருந்து சூரியஒளி மின்சாரத்தை வாங்குவதற்காக, தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் பாமக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
அந்தக் கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்க முடியாத முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த விவகாரத்தை திசை திருப்பும் வகையில் பேசியிருக்கிறார். அதானி ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையை ஆதரிக்க பாஜக, பாமக தயாரா என்று முதல்வர் வினவியுள்ளார்.
அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையை ஆதரிக்க பாமக தயாராக இருக்கிறது. இதில் பாமகவுக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு குறித்து முதல்வரின் பதில் என்ன?
அதானி குழுமம் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கெனவே விளக்கம் அளித்துவிட்டார் என்று கூறி, செந்தில் பாலாஜியின் முதுகுக்கு பின்னால் ஒளிந்து கொள்வது ஏன்?
அதானி குழுமத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை பாமக முழுமையாக ஆதரிக்கிறது. அதேபோல, தமிழ்நாடு மின் வாரியத்துக்கு அதானி குழுமம் லஞ்சம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கோ அல்லது உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கோ உத்தரவிட தயாரா என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.