விசிகவுடன் ஒப்பிடும் அளவுக்கு பாஜக கீழே இறங்கி விடவில்லை - அண்ணாமலை விமர்சனம்


திருச்சி விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

கூட்டணிக் கட்சிகளையும் இணைத்து, விரைவில் திமுக ஃபைல்ஸ்-3 வெளியிடப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் டங்ஸ்டன் சுரங்கப் பணிகளை நிறுத்துவது குறித்து மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை நானும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் டிச. 12-ல் (நாளை) சந்தித்து முறையிட உள்ளோம். அப்போது ஒரு நல்ல முடிவு கிடைக்கும்.

இந்த விவரத்தை தமிழக முதல்வர் அறிந்துகொண்டு, டங்ஸ்டன் சுரங்கப் பணிகளை தொடங்கினால் பதவி விலகுவேன் என்று சட்டப்பேரவையில் கூறியுள்ளார். அவர் பதவி விலக வேண்டும் என்றால், முதலில் டாஸ்மாக் பிரச்சினைக்காகத்தான் பதவி விலக வேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜூனா நீக்கப்பட்டு இருப்பது, அவர்களது உட்கட்சி விவகாரம். அம்பேத்கரை வைத்து யார் அரசியல் வியாபாரம் செய்தார்கள் என்பது தமிழக மக்களுக்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிந்து விட்டது. விசிக கடந்த 15 நாட்களாக திருமாவளவனின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது குறித்து நான் கேட்ட கேள்விக்கு, திருமாவளவன் விதண்டாவாதம் பேசியுள்ளார். விசிகவுடன் ஒப்பிடும் அளவுக்கு, பெரிய கட்சியான பாஜக கீழே இறங்கிவிடவில்லை.

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறையின் கீழ் முடி திருத்துதல், இஸ்திரி போடுவது, மீனவர்களின் குழந்தைகளுக்கான பயிற்சி என பல தொழிற்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இவையெல்லாம் குலக்கல்வியை கொண்டு வருவதற்கான பயிற்சி இல்லையா? மத்திய அரசு எங்கேயும் குலக்கல்வியை ஊக்குவிக்கவில்லை. விஸ்வகர்மா திட்டம் என்பது அவர்களின் தொழிலை ஊக்குவிக்கத்தான் கொண்டுவரப்பட்டுள்ளது.

திமுக ஃபைல்ஸ்-1, ஃபைல்ஸ்-2 ஆகியவற்றை ஏற்கெனவே வெளியிட்டுள்ளோம். 2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி விரைவில் திமுக ஃபைல்ஸ்-3 வெளியிடப்படும். இதில், திமுகவுடன், அதன் கூட்டணிக் கட்சிகளையும் இணைத்து வெளியிட உள்ளோம். கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் டெண்டர்கள் யார் யாருக்குச் சென்றுள்ளது என்பதை முழுமையாக ஆராய்ந்து தெரிவிக்கப்படும். திமுக ஃபைல்ஸ்-3 தமிழக அரசியலைப் புரட்டிப் போடும் அளவுக்கு இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

2026-ல் கூட்டணி ஆட்சி: நாகையில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறும்போது, ‘‘தமிழகத்தில் நடைபெற்று வரும் மன்னராட்சி 2026-ல் அகற்றப்படும். அப்போது தமிழகத்தில் நிச்சயம் கூட்டணி ஆட்சி அமையும். விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜூனாவை நீக்கிவிட்டோம் என்று திருமாவளவன் கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுகவுக்கு எதிரான வாக்குகளைப் பிரிப்பதற்கான நாடகமாக இதைக் கருதுகிறோம்’’ என்றார்.

x