இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 21 பேர் தாயகம் திரும்பினர்


இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 21 பேர் நீதிமன்ற உத்தரவின்படி தாயகம் திரும்பினர்.

இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 21 பேர் தாயகம் திரும்பினர்.

கடந்த நவம்பர் 9-ம் தேதி ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற 3 விசைப் படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி 23 மீனவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீண்டும் இலங்கை கடற்பகுதிக்குள் மீன்பிடித்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் 20 மீனவர்களை ஊர்க்காவல் துறை நீதிமன்றம் விடுதலை செய்தது. அதேநேரம், 3 விசைப்படகு ஓட்டுநர்களுக்கு தலா 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

முன்னதாக, கடந்த ஜூன் 22-ம் தேதி ராமேசுவரத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஒரு விசைப்படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், அதிலிருந்த 7 மீனவர்களை கைது செய்தனர். அவர்களில் சைப்படகு ஓட்டுநர் காளீஸ்வரன் என்பவருக்கு மட்டும் ஓராண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதித்து ஊர்க்காவல் துறை நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இந்நிலையில், காளீஸ்வரனின் சிறை தண்டனையையும், அபராதத்தையும் ரத்து செய்யக் கோரி அவரது குடும்பத்தினர் சார்பாக யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதையடுத்து, நவ. 7-ம் தேதி காளீஸ்வரன் விடுதலை செய்யப்பட்டார்.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட 21 மீனவர்களும் கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தடைந்தனர். அங்கிருந்து மீன்வளத் துறையினர் தனி வாகனங்கள் மூலம் அவர்களை நேற்று காலை ராமேசுவரத்துக்கு அழைத்து வந்தனர்.

x