அதானி குறித்த ஸ்டாலின் விளக்கம் முதல் மிக கனமழை அலர்ட் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


என்னை அதானி சந்திக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்: தமிழக சட்டப்பேரவை விவாதத்தில், பாமக உறுப்பினர் ஜி.கே.மணி பேசும்போது, அதானி விவகாரத்தை முன்வைத்து சில கேள்விகளை எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “தமிழகத்தில் அதானி குழுமத்தின் தொழில் முதலீடுகள் குறித்து பொது வெளியில் வரும் தவறான புகார்களுக்கு, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெளிவான விரிவான விளக்கத்தை அளித்துள்ளார்.

அதானி மீது சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அமைக்க வேண்டும், அது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று இண்டியா கூட்டணி கட்சிகள் முழக்கமிட்டு வருகின்றன. திமுக மீது குறையும் சொல்லும் பாஜக, பாமக, நாடாளுமன்றத்தில் இந்த கோரிக்கையை ஆதரிக்கவும், விளக்கி பேசவும் தயாராக இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது ஜி.கே.மணி, “நாடாளுமன்றமாக இருந்தாலும், சட்டப்பேரவையாக இருந்தாலும், தமிழகத்தின் பிரச்சினை என்ற காரணத்தால் தான் அரசு விளக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்,” என்றார். அதற்கு முதல்வர் ஸ்டாலின், “பலமுறை சொல்லியிருக்கிறோம். இப்போதும் சொல்கிறேன். அதற்கும் தமிழகத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. என்னை அதானி சந்திக்கவில்லை. நான் அவரை பார்க்கவும் இல்லை.” என்றார்.

நிவாரணத் தொகையை உயர்த்த வலியுறுத்தல்: தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் அதிமுக, விசிக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

ஆதவ் அர்ஜுனா விவகாரம்: தமிழிசை கேள்வி: விசிகவிலிருந்து அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா 6 மாத கால இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் “ஆறு மாதத்திற்குள் ஆதவ் மனம் மாறுவாரா... அல்லது திருமா அணி மாறுவாரா?” என்று தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கல்வி உதவித் தொகை: பிரதமருக்கு முதல்வர் கடிதம் - ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் மெட்ரிக் கல்விக்கு பிந்தைய உதவித் தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகைக்கான வருடாந்திர குடும்ப வருமான உச்சவரம்பினை 2.50 லட்சம் ரூபாயிலிருந்து, 8 லட்சம் ரூபாயாக உடனடியாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

உ.வே.சா பிறந்தநாள் இனி ‘தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி’ நாள்: ‘தமிழ் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர் பிறந்தநாள் இனி தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

புதிய அரசு அமைக்க சிரியா பிரதமர் ஆதரவு: சிரியாவில் புதிய அரசாங்கத்தை அமைக்க கிளர்ச்சியாளர்களுக்கு பிரதமர் முகம்மது ஜலாலி, துணை அதிபர் ஃபைசல் மேக்தாத் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிளர்ச்சியாளர்களிடம் ஆட்சியை ஒப்படைக்க ஒப்புக்கொண்ட ஜலாலி ஆட்சி, இந்தம் மாற்றம் நிறைவடைய சில நாட்கள் ஆகும் என கூறியதாக தெரிகிறது.

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மறைவு: கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார். அவருக்கு வயது 92. கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அவர், செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணி அளவில் காலமானார். கடந்த ஆண்டு அவரது அரசியல் பணியை போற்றும் வகையில் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மம்தாவின் விருப்பத்துக்கு லாலு ஆதரவு: மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, இண்டியா கூட்டணிக்கு தலைமையேற்க அனுமதிக்க வேண்டும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தியுள்ளார். அவரைப் போலவே சில கூட்டணிக் கட்சிகளும் மம்தாவின் விருப்பத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

மாநிலங்களவை தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: இண்டியா கூட்டணி முடிவு - மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தன்கருக்கு எதிராக இண்டியா கூட்டணி எம்பிக்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளனர். இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, “இண்டியா கூட்டணியைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளும் மாநிலங்களவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளன.

மாநிலங்களவையை மிகவும் ஒரு சார்பாக நடத்தும் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சமர்ப்பிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இது மிகவும் வேதனையான முடிவு. ஆனால் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நலன்களுக்காக இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டியிருந்தது. இதற்கான முன்மொழிதல் மாநிலங்களவை பொதுச் செயலரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிக கனமழை: வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி செவ்வாய்க்கிழமை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. இதன் காரணமாக, புதன்கிழமை கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிரியங்கா காந்தி விமர்சனம்: அதானி விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவதால் பாஜக மக்களவையை செயல்பட அனுமதிப்பதில்லை என்று காங்கிரஸ் முக்கியத் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

x