மதுரை: முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டப்பணிகள் நிறைவுபெற்ற வார்டுகளில் குடிநீரை புதிய மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கும், வீடுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
‘அம்ரூத்’ திட்டத்தின் கீழ் ரூ.1653.21 கோடி மதிப்பீட்டில் முல்லை பெரியாறு குடிநீரை, மதுரை மாநகராட்சிக்கு கொண்டு வரும் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் லோயர்கேம்ப் பகுதியில் தடுப்பணை, ஆற்று நீரேற்று நிலையம் அமைத்தல், பண்ணைப்பட்டி சுத்திகரிப்பு நிலையம் வரை 96 கி.மீ. நீளத்திற்கு சுத்திகரிக்கப் படாத குடிநீர் பிரதானக் குழாய் பதித்தல், பண்ணைப்பட்டி 125 எம்.எல்.டி. குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் போன்ற பணிகள் நிறைவு பெற்றது.
அதனை தொடர்ந்து பண்ணைப்பட்டியில் இருந்து மதுரை மாநகர் வரை 55.44 கி.மீ. நீளத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிரதான குழாய் பதித்தல், 37 குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் மற்றும் ஒரு தரைமட்ட தொட்டி கட்டுதல் போன்ற பணிகளும் நிறைவு பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த திட்டத்தில் குடிநீர் விநியோகம் செய்வதற்கு, மாநகராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் 32 வார்டுகளில் 855 கி.மீ நீளத்திற்கும், மாநகராட்சியின் மையப் பகுதியில் உள்ள 57 வார்டுகளில் 813 கி.மீ நீளத்திற்கும் குடிநீர் விநியோக குழாய்கள் பதித்தல் மற்றும் வீட்டு இணைப்புகள் வழங்குதல் பணிகள் நடக்கிறது. இந்த குடிநீர் திட்டம் பணிகள் நிறைவு பெற்ற 99வது பாலாஜி நகர், 94 வது வார்டு குறிஞ்சி நகர், 3 வது வார்டு, 75 வது வார்டு சுந்தரராஜபுரம் பார்க் ரோடு உள்பட விரிவாக்கப்பட்ட பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் பெரியாறு கூட்டுக் குடிநீரை ஏற்றி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
இதில், குடிநீர் குழாய்களில் செல்லும் குடிநீர் அழுத்தம், தொட்டி மற்றும் குழாய்களில் ஏற்படும் கசிவை கண்டறிதல் உள்ளிட்ட பணிகள், குடிநீர் மேல்நிலைத் நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து குழாய்கள் மூலம் வீடுகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வீடுகளின் குடிநீர் இணைப்புகள் சரிபார்க்கும் பணிகளை போன்றவை நடந்தது. இப்பணிகளை மாநகராட்சி மேயர் இந்திராணி, ஆய்வு மேற்கொண்டார்.
அவர் கூறுகையில், “மதுரை மாநகராட்சி பகுதிகளில் இந்த திட்டத்திற்காக மொத்தம் 37 குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது. இதில் 16 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் நீர் ஏற்றப்பட்டு சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து மேல்நிலைத் நீர்த் தேக்கத் தொட்டிகளிலும் சோதனை ஓட்டமாக நீர் ஏற்றும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது’’ என்றார்.
குடிநீர் கசிவை சரிசெய்ய பாழாக்கப்படும் புதிய சாலைகள்: பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவு பெற்ற ஒவ்வொரு மண்டலம் வாரியாக சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சோதனை ஓட்டத்தில் குடிநீர் குழாய்களில் பல இடங்களில் குடிநீர் கசிவு ஏற்பட்டுள்ளது. வீடுகளில் இணைக்கப்பட்ட குடிநீர் குழாய்களிலும் குடிநீர் கசிவு கண்டறியப்பட்டது. இந்த குறைபாடுகளை மறுசீரமைக்க, மாநகராட்சி அதிகாரிகள் ஒப்பந்த நிறுவனம் தொழிலாளர்களை கொண்டு சாலைகளை தோண்ட வேண்டும்.
இந்த சாலைகள் ஏற்கனவே குடிநீர் திட்டப்பணிகள் நிறைவு பெற்று புதிதாக போடப்பட்டவை. தற்போது குடிநீர் கசிவு ஏற்பட்டுள்ளதால் மீண்டும் இந்த புதிய சாலைகளை தோண்டி பாழாக்கி குடிநீர் கசிவு சரிசெய்யப்பட உள்ளது. அதனால், புதிய சாலைகள் போடப்பட்டதின் நோக்கம் நிறைவடையாமல் மாநகராட்சிக்கு நிதியிழப்பு ஏற்படும்.