புயல் பாதிப்பால் பயிர்க் கடன், வரிகளை ரத்து செய்ய வேண்டும்: புதுச்சேரி முதல்வரிடம் அதிமுக மனு 


புதுச்சேரி: புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமியை இன்று அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: 'புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயல், பெருமழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் நிவாரண உதவியை அறிவித்த முதல்வருக்கு அதிமுக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தற்போது புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை கருத்தில் கொண்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய பகுதிகளை இயற்கை பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவித்துள்ளீர்கள். மாநில பேரிடர் மேலாண்மை அமைப்புக்கு தலைவரான தாங்கள், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் படி எதிர்வரும் 2025 ஜூன் 30 வரை மக்களுக்கு உரிய சலுகைகளை அறிவிக்க வேண்டும்.

குறிப்பாக பயிர் கடன், தொழில் வரி, சொத்துவரி, குப்பை வரி, வீட்டு வரி, நிலவரி, மின்கட்டண வரி, கலால்வரி, வணிக வரி, கூட்டுறவு சங்க கடன்கள், மீனவர் கடன், ஆதிதிராவிடர் கடன், சிறு குறு தொழில் புரிவோர் கடன், நடைபாதை வியாபாரிகள் வங்கி கடன், தனியார் பள்ளி கல்வி கட்டன, சுய உதவிக் குழு கடன் உள்ளிட்ட அனைத்து தரப்புக்கும் இயற்கை பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் அனைத்து வரிகள், கடன்களை மாநில முதல்வர் ரத்து செய்து அறிவிக்க வேண்டும்.

ஏற்கெனவே புயல் நிவாரண அறிவிப்பில் மழை நீர் முழுமையாக உட்புகுந்து பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரண இழப்பீட்டு தொகை அறிவிக்கப்படவில்லை. உப்பளம், காமராஜ் நகர், வில்லியனூர், பாகூர், நெட்டப்பாக்கம், மண்ணாடிப்பட்டு ஏம்பலம், மணவெளி, மங்கலம், உழவர்கரை, உருளையன்பேட்டை உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் உள்ள அனைத்து வீடுகளும் பாதிக்கப்பட்டன.

அவ்வாறு மழை நீர் உட்புகுந்து மிகுந்த சேதாரம் அடைந்துள்ள அனைத்து வீடுகளுக்கும் கூடுதல் நிவாரணத்தை முதல்வர் இரண்டாம் கட்ட நிவாரண அறிவிப்பில் அறிவிக்க வேண்டும். அதே போன்று சேதமடைந்த படகுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீட்டு தொகை அறிவிக்கப்பட்டது.

அதை மாற்றம் செய்து பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு படகுக்கும் படகின் விலை தகுதிக்கு ஏற்றார்போல் இழப்பீட்டு தொகை அனைத்து படகிற்கும் அறிவிக்க வேண்டும். விவசாய விளைநிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர், கரும்பு, மணிலா, சவுக்கு, வெற்றிலை, வாழை, பயிர் வகைகள் உள்ளிட்ட பயிர்களுக்கு தகுந்தார் போல் தனித்தனியாக இழப்பீட்டு தொகையை அறிவிக்க வேண்டும்.' இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

x