விழுப்புரம்: மிரட்டல் விடுத்த ஊராட்சி மன்றத் தலைவரைக் கைது செய்யக் கோரி மயிலம் காவல் நிலையம் அருகே பாமக இன்று மறியலில் ஈடுபட்டது.
திண்டிவனம் அருகே பெரும்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக ராஜாங்கம் என்பவர் பதவி 0.வகிக்கிறார். ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் அதிகளவிலான மழை கொட்டி தீர்த்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் பெரும்பாக்கத்தில் குடிநீர் குழாய்கள் பாதிக்கப்பட்டு குடிநீர் வரவில்லை என 2 நாட்களுக்கு முன்பு மயிலம் - புதுச்சேரி சாலையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது காவல்துறையினர் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி அவர்களுக்கு குடிநீருடன் ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்து சாலை மறியலை கைவிட செய்தனர்.
இந்த சாலை மறியலை ஏற்பாடு செய்தது வன்னியர் சங்க ஒன்றிய செயலாளர் முத்துக்குமரன் மற்றும் திமுக நிர்வாகி விஜயா ஆகியோர் தான் காரணம் எனக் கூறிய ஊராட்சி மன்ற தலைவர் ராஜாங்கம், முத்துக்குமரனை தொலைபேசியில் தொடர்புகொண்டு உங்களை கொலை செய்து விடுவேன், ஜேசிபியால் வீட்டை இடித்து விடுவேன் எனவும் ஆபாசமாக பேசியுள்ளார். அந்த ஆடியோவில் மயிலம் உதவி ஆய்வாளர் ஆய்வாளர் வெங்கடேசனும் ஊராட்சி மன்ற தலைவருடன் பேசியுள்ளார்.
இந்த ஆடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இது குறித்து முத்துக்குமரன் மயிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்த்தார். இப்புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் ஊராட்சிமன்றத் தலைவரை கைது செய்யவில்லை.
இதற்கிடையே இன்று முற்பகல் 11 மணிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜாங்கம் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ம.க., கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமையில் பாமகவினர் 50க்கும் மேற்பட்டோர் பேர் மயிலம் போலீஸ் ஸ்டேஷன் அருகே சாலை மறியல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் விழுப்புரம் ஏடிஎஸ்பி திருமால், திண்டிவனம் டி.எஸ்.பி., பிரகாஷ் ஆகியோர் போராட்டம் செய்த பா.ம.கவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியவுடன் சாலைமறியலை கைவிட்டனர்.