புதுப்பொலிவுப்பெறும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம்: அரசுக்கு திட்ட மதிப்பீடு அனுப்பிய மாநகராட்சி!


மதுரை: மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், ரூ.15 கோடியில் புதுப்பொலிவுப்படுத்தப்பட உள்ளது. இதற்காக மாநகராட்சி திட்டமதிப்பீடு தயார் செய்து தமிழக அரசு ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.

கடந்த காலத்தில் மதுரையில் ஆரப்பாளையம், பெரியார் நிலையம், அண்ணா பேருந்து நிலையம் ஆகிய மூன்று இடங்களில் பேருந்து நிலையங்கள் செயல்பட்டன. இந்த மூன்று பேருந்து நிலையங்களுக்கு மாற்றாக, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தை கடந்த 1999ம் ஆண்டு மே 25ம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.

சுமார் 18 ஏக்கரில் சென்னை கோயம்பேடுக்கு அடுத்து தமிழகத்திலே இரண்டாவது பெரிய பேருந்து நிலையமாக, மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செயல்படுகிறது. குழந்தைகளுக்கு பாலூட்டும் அறைகள், பயணிகள் காத்திருக்கும் அறைகள், தொலை தூர பேருந்துகளுக்கு முன்பதிவு அலுவலகங்கள், இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி, மருந்தகம், முதலுதவி மையம், ஆட்டோ நிறுத்தம், வாடகை கார்கள் நிறுத்தம் மற்றும் போலீஸ் நிலையம் போன்ற பல்வேறு வசதிகளுடன் செயல்பட்டதால், தமிழகத்திலே ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்ற முதல் பேருந்து நிலையமாக மாட்டுத்தாவணி இருந்து வந்தது.

அதன் பிறகு கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகள், தற்போது திமுக ஆட்சியில் கடந்த மூன்றரை ஆண்டிற்கு மேலாக இந்த பேருந்து நிலையம் பராமரிப்பு இல்லாமல் இருந்தது. அதனால், பேருந்து நிலையத்தின் மேற்கூரை சிலதமடைந்து இடிந்தும், உதிர்ந்தும் கீழே விழுந்தது. பயணிகள் பயன்படுத்த முடியாமல் கழிப்பிட அறைகள், தூர்நாற்றம் வீசியது.

அதனால், இரவு நேரங்களில் பயணிகள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்த ஆரம்பித்ததால் பேருந்து நிலையம் வளாகம் தூர்நாற்றம் வீசியது. பேருந்து நிலையம் வளாகத்தின் தரைத்தளம் உருகுலைந்து மேடு, பள்ளமாக பயணிகள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு மோசமாக மாறியது. முதியவர்கள், குழந்தைகள் நடந்து சென்றால் கற்கள் அவர்களது கால்களை பதம் பார்த்தன. மழைக் காலத்தில் மழைநீரும், சாக்கடை நீரும் தேங்கி, பேருந்து நிலையம் தெப்பமாக மாறியது.

இந்நிலையில், இந்த பேருந்து நிலையத்தை மறுசீரமைத்து புதுப்பிக்க, மாநகராட்சி நிர்வாகம் ரூ.15 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து தமிழக அரசு ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. இன்னும் ஒரிரு நாளில் நிதி ஒதுக்கீடு அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும், விரைவில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் பழைய அதன் சிறப்பான நிலையை மீட்டெடுக்கும் பணிகள் தொடங்க உள்ளதாகவும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ”தற்போது உள்ள பழைய கழிப்பறைகளை இடித்துவிட்டு ரூ.45 லட்சத்தில் நவீன கழிப்பறைகள் கட்டப்பட உள்ளன. பழுதடைந்த மேற்கூரை, நடைமேடைகள் மறுசீரமைக்கப்பட உள்ளது. பேருந்து நிலையத்தின் சுவர்கள் அனைத்தும் வெள்ளையடிக்கப்பட உள்ளது. கற்கள் பெயர்ந்து குண்டும், குழியமாக உள்ள பேருந்து நிலையத்தின் வளாகம் முழுவதும் புதிய சாலைகள் அமைக்கப்பட உள்ளது. ஒட்டுமொத்தமாக பேருந்து நிலைத்தில் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்து புதுப்பொலிவுப்படுத்தப்பட உள்ளது” என்று மாநகராட்சி அதிகாரி கூறினார்.

x