ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு அறக்கட்டளை அமைத்து மத்திய அரசு நிர்வாகம் செய்ய வேண்டும், என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் பிரபாகரன், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, 'உலக பிரசித்தி பெற்ற புண்ணியஸ்தலமான ராமேசுவரம் அருள்மிகு ராமநாத சுவாமி கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உலகெங்கிலுமிருந்தும், குறிப்பாக வட இந்திய பக்தர்கள் அதிகமாக வந்து செல்கின்றனர். தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் ராமநாத சுவாமி கோயிலில் பக்தர்களுக்கு தேவையான எந்தவித அடிப்படை வசதிகளையும் திருக்கோவில் நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை.
தினந்தோறும் அதிகாலை நடைபெறும் ஸ்படிக லிங்க பூஜைக்கு ரூ.50, ரூ.200 கட்டணம் வசூல் செய்கின்றனர். இதனால் பணம் இல்லாத பக்தர்கள் ஸ்படிக லிங்க தரிசனத்தை தரிசிக்க முடியாத சூழல் உள்ளது. கோயிலுக்குள் உள்ளே அமைந்துள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடுவதற்கு ஒரு நபருக்கு ரூ.25 கட்டணம் வசூல் செய்து வருகின்றனர். தீர்த்தம் நீராட செல்லும் பக்தர்கள் செல்லும் வழிகளில் முறையான பராமரிப்பு இல்லாமல் பக்தர்கள் வழுக்கி கீழே விழும் நிலையில் வைத்துள்ளனர்.
மேலும் கட்டண தரிசன வரிசையில் செல்லும் பக்தர்களை வரிசைப் படுத்துவதற்காக பிரகாரங்கள் முழுவதும் கம்பி தடுப்புகளை வைத்து கோயிலின் கலை மிகு சிற்பங்களையும், அழகையும் மறைத்து உள்ளனர். கோயிலைச் சுற்றி, சுற்றி பக்தர்களுக்கு ஓய்வுக்கூடம் கூட அமைத்து தரப்படவில்லை.
கட்டண சீட்டு வருமானமும், உண்டியல் வருமானமும் மாதந்தோறும் கோடிக் கணக்கில் வரும் போதும் அரசு அந்த நிதியை கோயில் நிதியை வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல் தமிழக அரசு பக்தர்களை ஏமாற்றி வருகின்றனர். இவற்றை கவனத்தில் கொண்டு வாரணாசியில் அமைந்துள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலை மத்திய அரசு நேரடி கவனம் செலுத்தி உரிய புனரமைப்புப் பணிகள் செய்து மேம்படுத்தியது போன்று, ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு அறக்கட்டளை அமைத்து மத்திய அரசு நிர்வாகம் செய்ய வேண்டும்’ என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.