மருத்துவரின் அலட்சியத்தால் பிரசவத்தின் போது இளம்பெண் உயிரிழப்பு என புகார்: தாம்பரம் அருகே அதிர்ச்சி!


தாம்பரம்: சேலையூரில் பிரசவத்துக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண், குழந்தை பிறந்த சில நிமிடங்களில் உயிரிழந்தார். இதற்கு மருத்துவர் அலட்சியமே காரணமென உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்லாவரம் திருநீர்மலை வைத்தியகார தெருவை சேர்ந்தவர் சரண்யா (34). உணவுப்பொருள் வழங்கல் துறையில், கோபாலபுர சரக மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு 9 வயதில் மகன் உள்ளார். இரண்டாவது முறையாக கர்ப்பமான சரண்யா, ராஜகீழ்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பிரசவத்துக்காக நேற்று அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரண்யாவிற்க்கு பெண் குழந்தை பிறந்தது.

பின்னர் சரண்யா ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறிய மருத்துவர்கள், வேளச்சேரியில் இருந்து மருத்துவர்களை அழைத்து வந்து சிகிச்சை அளிப்பதாக கூறியுள்ளனர். ஆனால், தொடர்ந்து எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சரண்யாவின் உறவினர்கள், மருத்துவர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, சரண்யா இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் நேற்று இரவு அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, மருத்துவர் சுதாவின் தவறான சிகிச்சையே தனது மனைவி சரண்யாவின் இறப்புக்கு காரணம் என்று மோகன்ராஜ் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து சரண்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து இப்புகார் குறித்து, சேலையூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x