மதுரை: கடந்த காலத்தில் சாலைகளை புதுப்பிக்கும் போது, பழைய சாலைகளின் தார் அடுக்கை சுரண்டி எடுக்காமல் புதிதாக சாலை அமைக்கப்பட்டதால், மதுரை மாநகராட்சியில் பழைய நகர குடியிருப்புகளில் சாலைகள் மேடாகவும், வீடுகள் தாழ்வாகவும் உள்ளது. அதனால், மழைக்காலங்களில் தண்ணீர், எளிதாக வீடுகளுக்குள் புகுந்து பெரும் மழை பாதிப்பு போன்ற தோற்றம் ஏற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் தார் சாலைகளை புதுப்பிக்கும்போது, பழைய சாலைகளில் போடப்பட்ட தார் அடுக்கை சுரண்டி எடுத்துவிட்டு (Milling) புதிய சாலை அமைக்க வேண்டும் என்றும், எந்தச் சூழ்நிலையிலும் சாலைகளின் மட்டத்தை அதிகரிக்கக் கூடாது, இந்த நடைமுறை வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதை தடுக்கும் என்று தமிழக அரசு கண்டிப்பான அறிவுரை வழங்கியுள்ளது. ஆனால், மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை, மாநகராட்சி சார்பில் கடந்த கால்நூற்றாண்டாக சாலைகளை புதுப்பிக்கும்போது தார் அடுக்கை முறையாக சுரண்டி எடுக்காமலே புதிய சாலைகள் போடப்படுகிறது.
அதனால், மாநகராட்சி பழைய நகர் பகுதியில் இப்படி பல அடுக்காக தார் மட்டம் சேர்த்து சாலைகள் மேடாகவும், வீடுகள் பள்ளமாகவும் அல்லது சாலையும், வீடும் சமதளமாகவும் மாறிவிடுகின்றன. சாலைகள் புதுப்பித்து புதிய சாலை பணிகள் பெரும்பாலும் அதிகாரிகள் மேற்பார்வையில் நடப்பதில்லை. அதனால், ஒப்பந்த நிறுவன தொழிலாளர்கள், பழைய சாலை மீதே தார் போட்டு மீண்டும் சாலையை புதுப்பிக்கிறார்கள். இப்படி பல அடுக்காக சேர்த்து சாலைகள் மேடாகவும், வீடுகள் பள்ளமாகவும் அல்லது சாலையும், வீடும் சமதளமாகவும் மாறிவிடுகின்றன.
வீடுகள் மட்டத்தை மறு சீரமைக்க, நகர் பகுதிகளில் வசதிப் படைத்தவர்கள், வீடுகள் அஸ்திவாரத்தை, நவீன தொழில்நுட்ப முறையில் சாலை மட்டத்தை விட தூக்கி நிறுத்தி வைக்கின்றனர். அதற்கு பல லட்சம் ரூபாய் செலவு ஆவதால், நடுத்தர, ஏழை மக்களால் வீடுகள் மட்டத்தை உயர்த்தவும் முடியாமலும், மழைக்காலங்களிலும் வீடுகளில் மழைநீரும், அதனுடன் சாக்கடை நீரும் புகுவதை தடுக்க முடியாமலும் சிரமப்படுகிறார்கள். அதனால், மழைக்காலத்தில் சாலைகளில் ஓடும் மழைநீர் மிக எளிதாக வீடுகளில் புகுந்துவிடுவதால், பருவ மழை காலங்களில் மதுரை மாகநராட்சியில் ஏதோ மழைநீர் பாதிப்பு அதிகமாக இருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டு வருகிறது.
கடந்த காலத்தில் மதுரை ஏவி மேம்பாலத்தின் நடைமேடை மேலே இருந்து சாலையில் குதிக்கிற அளவிற்கு பாலத்தின் சாலை இருந்துள்ளது. ஆனால், ஏவி மேம்பாலத்தில் காணப்படும் தார் அடுக்கை சுரண்டி எடுக்காமல் தொடர்ந்து பாலத்தின் மேல் தளம் மேடாக மாறி, தற்போது பாலத்தின் நடைமேடையும், சாலையும் சமதளத்திற்கு மாறி வருகின்றன. மாவட்ட ஆட்சியரும், ஆணையாளரும் சாலைகள் புதுப்பிக்கும் பணியை கண்காணித்து சரியான முறையில் போடப்படுகிறதா? வீடுகள் பள்ளமாக உள்ள நகர குடியிருப்புகளை ஆய்வு செய்து, அப்பகுதியின் சாலைகளை மறுசீரமைக்கவும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மழைக் காலத்தில் வீடுகளில் தண்ணீர் புகுவதை தடுக்க முடியும்.