புதுச்சேரி: வரும் மழை காலங்களில் புதுச்சேரியில் அனைத்து வட்டாட்சியர்களுக்கும் ஒயர்லெஸ் போன் அளிக்கப்படும் என்று ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பாக மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் சார்பு ஆட்சியர்கள் சோம சேகர், இசிட்டா ரதி மற்றும் சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியர்கள் ஆகியோருடன் இன்று காலை ஆட்சியர் வளாகத்தில் ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு ஃபெஞ்சல் புயல் புதுவை அருகே கரையை கடந்து புதுச்சேரி மிகவும் சேதமடைந்த நிலையில் அதன் அனுபவங்கள் குறித்தும் மேலும் தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இரண்டு ஒரு தினங்களில் மழை பொழிய வாய்ப்புள்ளது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசுகையில், பொதுப்பணித் துறை மூலம் தேவைப்படும் பகுதிகளில் அதிகளவு மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். ஜே.சி.பி மோட்டார் போன்ற இயந்திரங்கள் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். பேரிடர் காலங்களில் அனைத்து அதிகாரிகளும் கவனமுடனும் விரைவாகவும் பணியாற்ற வேண்டும். பாகூர் போன்ற பகுதிகளில் மழை அதிகம் ஏற்படும் போது அப்பகுதியிலேயே உணவுக் கூடம் அமைத்து உணவு தயார் செய்ய வேண்டும்.
தன்னார்வலர்களைக் கொண்டு பொதுமக்களுக்கு உணவு போன்ற பொருட்களை அளிக்க வேண்டும். தாழ்வான பகுதிகள் அனைத்தும் அதிகாரிகளின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். சாத்தனூர், வீடூர் போன்ற அணைகள் திறக்கும் பொழுது முன் கூட்டியே பொதுப்பணித் துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு கவனமுடன் செயல் பட வேண்டும்.
தாழ்வான பகுதியில் வசிப்பவர்களை தகுந்த பாதுகாப்புடன் தங்க வைக்க வேண்டும். ஃபெஞ்சல் புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும். வரும் மழை காலங்களில் அனைத்து வட்டாட்சியகர்களுக்கும் ஒயர்லெஸ் போன் அளிக்கப்படும். வரும் மழைக் காலங்களில் அரசு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்” என்று ஆட்சியர் குறிப்பிட்டார்.