சென்னையில் மலர் கண்காட்சி: உதகையில் இருந்து 6 லட்சம் நாற்றுகள் அனுப்பும் பணி தீவிரம்


உதகை: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இருந்து சென்னை மலர் கண்காட்சிக்கு 6 லட்சம் மலர் நாற்றுகள் அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணங்களில் 90 சதவீதம் பேர் உதகை அரசு தாவரவியல் பூங்காவுக்கு வருவார்கள். இதன்படி வழக்கமான நாட்களில் தினசரி 10 ஆயிரம் பேரும், தொடர் விடுமுறை நாட்களில் தினசரி 15 ஆயிரம் பேரும், மே மாதத்தில் தினசரி 20 ஆயிரம் பேரும் வருகின்றனர். கடந்தாண்டு 8 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனர். நீலகிரியில் இரண்டாவது சீசன் முடிந்துவிட்டது.

குளிர் பிரதேசங்களில் நடத்தப்படும் மலர் கண்காட்சியை சென்னையில் நடத்தினால் எப்படி இருக்கும் என்ற சென்னை மக்களின் ஏக்கத்தை போக்கும் வகையில் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை சார்பில் செம்மொழிப் பூங்காவில் கடந்த சில ஆண்டுகளாக மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு நடந்த கண்காட்சியில் ஒவ்வொரு பூக்களின் விவரங்கள் அடங்கிய பதாகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டு, அதில் அந்த பூக்களின் தாவரவியல் பெயர், சாகுபடி செய்யும் இடங்கள், எவ்வளவு பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது? என்பது போன்ற தகவல்களும், சங்க இலக்கியங்களில் மலர்களின் பருவ நிலை, கபிலரின் குறிஞ்சிப்பாட்டு மலர்கள், சாலையோர பூக்கும் மலர்கள், திருக்குறளில் இடம்பெறும் மலர்கள் எவை? என்பது போன்ற பல்வேறு தகவல்களும் இடம் பெற்றன.

அதுமட்டுமல்லாமல் மலர் கண்காட்சியை பார்வையிட வருபவர்கள் சில இடங்களில் செல்ஃபி எடுத்து மகிழ்வதற்கு ஏற்றவாறு ‘செல்ஃபி ஸ்பாட்’ பகுதியும் கண்காட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் நடக்க உள்ள மலர் கண்காட்சிக்காக தமிழகத்தில் உள்ள தோட்டக்கலைத் துறை பூங்காக்களில் மலர் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு சென்னைக்கு அனுப்பப்படும்.

அந்த வகையில் நீலகிரியில் உள்ள முக்கிய பூங்கவான உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடப்பட்ட விதைகள் தற்போது செடிகளாகி பூக்கும் தருவாயில் உள்ளது. இந்த பூந்தொட்டிகளை லாரிகள் மூலம் சென்னைக்கு அனுப்பும் பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து தோட்டக்கலை துணை இயக்குனர் பெபிதா கூறியதாவது: ”சென்னையில் நடக்கும் மலர் கண்காட்சிக்காக நீலகிரி, கிருஷ்ணகிரி, கொடைக்கானல், கன்னியாகுமரி, மதுரை ஆகிய இடங்களில் இருந்து மலர்கள் எடுத்து வரப்பட்டு கண்காட்சியில் பயன்படுத்தப்பட உள்ளது. அரசு தாவரவியல் பூங்காவில் தூவப்பட்ட விதைகள் தற்போது பூக்கும் தருவாயில் உள்ளன. இங்கிருந்து பெஹோனியா, பெட்டுன்னியம், இன்கா, பிரெஞ்ச் மேரி கோல்டு, உள்பட 32 வகையான 6 லட்சம் மலர் செடிகள் அனுப்பப்படும்” என்று கூறினார்.

x