கும்பகோணம்: கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி தலைமை வகித்தார்.
மாநிலச் செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான சிவபுண்ணியம், ஏஐடியூசி மாநிலச் செயலாளர் தில்லைவனம், மாவட்டத் துணைச் செயலாளர் செந்தில்குமார் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, அதானி குழும நிறுவனங்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களையும், ஆண்டுக் கணக்கில் நீடித்து வரும் மணிப்பூர் கலவர சூழல் ஆகியவற்றைக் குறித்து நாடாளுமன்றக் கூட்டு குழு விசாரிக்க வேண்டும், உணவு தானியங்கள் உள்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்ந்து வருவதையும், பெருகி வரும் வேலையில்லா திண்டாட்டத்தை தடுக்க தவறிய பாஜக மத்திய அரசைக் கண்டித்துக் கண்டன முழக்கமிட்டனர்.
இதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் பங்கேற்று, கோரிக்கை விளக்கவுரையாற்றியப் பின் செய்தியாளர்களிடம் கூறியது, ”உலகப் பணக்காரர்களில் 2-வதாக திகழ்ந்து கொண்டிருக்கின்ற அதானி ஊழல் நிறைந்த மோசடி பேர்வழி என்பது நாடறிந்த உண்மை. மத்திய அரசு நேர்மையான அரசாக இருந்தால், அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அமெரிக்க நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், மத்திய பாஜக அரசு, அதானியை கைது செய்து, விசாரணைக்கு உட்படுத்திருக்க வேண்டும். ஆனால் எதுவும் செய்யவில்லை.
டங்ஸ்டன் சுரங்கத்தை, வேதாந்தா நிறுவனம் தொடங்குவதை மாநில அரசு அனுமதி பெறாமல், கேட்காமல் கடுமையாக எதிர்த்த நிலையிலும், மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம். இதை எதிர்த்து, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு, மதிப்பளித்து மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். பெரு மழையால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஏக்கருக்கு ஒன்றிற்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்.
டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் தெடார் மழை இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளனர். குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் லட்சக் கணக்கான குடிசை வீடுகள் தான் அதிகமாக உள்ளது. அதை முற்றிலுமாக நீக்கி, பல்வேறு திட்ட நிதிகள் மூலம் காங்கீரிட்டினாலான வீடுகள் கட்டிக் கொடுத்து, குடிசை இல்லாத மாவட்டங்களாக்குவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அவர்கள் புயலால் பாதிக்கப் படும் போது, ரூ ஆயிரம், ரூ.2 ஆயிரம் வழங்குவதால், அவர்களது பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது. இதற்கு தமிழக அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும். மேலும், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட பாதிப்பின் போது, மத்திய அரசு ஒரு பைசா கூட தமிழக அரசுக்கு வழங்க வில்லை. அண்மையில் பெய்த மழையால் பாதித்த பகுதிகளை மத்திய உயர்மட்டக் குழுவினர் பார்வையிட்டு சென்றுள்ளனர். அவர்களிடம், தமிழக அரசு, முதற்கட்டமாக ரூ.2,200 கோடி வழங்க வேண்டும் எனக் கடிதம் கொடுத்துள்ளார். அதற்கு மதிப்பளித்து மத்திய அரசு அந்த நிதியை வழங்க வேண்டும்.
சிபிஐ நூற்றாண்டு விழா மற்றும் விடுதலை போராட்ட வீரர் நல்லக்கண்ணு நூற்றாண்டு விழா ஆகிய 2 விழாக்கள் டிச.26ம் தேதி தொடங்குகிறது. பின்னர், வேங்கை வயல் பிரச்சனை என்ன ஆனது என கேட்ட போது, எப்போ, அது பழைய விஷயம், விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் எனத் தெரிவித்து, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.