புதுவை அரசு மருத்துவமனையில் முதல்முறை வாரம் 5 நாட்களுக்கு மாலையிலும் வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சை


புதுச்சேரி: புதுச்சேரி அரசு மருத்துவமனையில் மாலையிலும் வாரம் ஐந்து நாட்களுக்கு வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சை முதல்முறையாக துவங்கியுள்ளது.

புதுவை இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் காலை 7.30 முதல் 10.30 மணி வரை பதிவு செய்து வெளிப்புற நோயாளிகள் திங்கள் முதல் வெள்ளி வரை வாரம் 5 நாட்கள் சிகிச்சை பெறலாம். மதியம் 12.30 மணி வரை டாக்டர்களை நோயாளிகள் சந்திக்கலாம். சனிக்கிழமைகளில் காலை 8 முதல் 9.30 வரையிலும், ஞாயிற்றுக்கிழமை காலை 8 முதல் 9 வரையிலும் முன்பதிவு செய்து டாக்டர்களை சந்திக்கலாம். அரசு விடுமுறை நாட்களில் இயங்காது.

கூலி வேலை செல்லும் மக்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் காலை நேரத்தில் மருத்துவமனை வந்ததால், அன்றாட வருவாய் பாதிக்கப்பட்டது. இதனால் மாலை நேர வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவை தொடங்க வலியுறுத்தினர். இதையேற்று ஆளுநர் கைலாஷ்நாதன் மாலை நேர சிகிச்சை பிரிவு தொடங்க உத்தரவிட்டார்.

அதையடுத்து இந்தியாவிலேயே முதல் முறையாக புதுச்சேரியில் அரசு பொது மருத்துவமனையில் முதல்கட்டமாக மாலை 5 முதல் இரவு 7 மணி வரை சீட்டுப் பதிவு செய்து மாலை நேர வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இரவு 7.30 வரை செயல்பட தொடங்கி உள்ளது.

இங்கு அனைத்து சிகிச்சைக்கான டாக்டர்களும் இருப்பர். அவசர சிகிச்சை பிரிவு வழ்க்கம்போல இயங்கும். மாலை நேர சிகிச்சை திங்கள் முதல் வெள்ளி வரை ஐந்து நாட்களும் அனைத்து பொது மருத்துவம் பார்க்கப்படும் என்று அரசு மருத்துவனை தரப்பில் தெரிவித்தனர்.

x