வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவி வரும் நிலையில், இது அடுத்த 12 மணி நேரத்தில் வலுவடையத் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்து வரும் 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களான நாகை, கன்னியாகுமரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று டிசம்பர் 10ம் தேதி நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை டிசம்பர் 11ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூரில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.