கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை அடுத்த பசுபதிகோவில் திரவுபதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிவா மணிகண்டன் (28). மினி பேருந்து ஓட்டுநரான இவருக்கும், அதேப் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும், டிசம்பர் 6ம் தேதி அன்று, பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்புவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் ஏற்பட்டது. இந்த தகராறு தொடர்பாக சிவா மணிகண்டன், அன்று இரவு அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, அய்யம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே டிச.7ம் தேதி, ஒரு பைக்கில் முகமூடி அணிந்து வந்த 3 பேர் வெட்டிக் கொன்றனர். இந்த வழக்கில் அய்யம்பேட்டை போலீஸார் 5 தனிப் படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இதனிடையே, கொலையில் ஈடுபட்டவர்களுக்கு வாகனம் தந்து உதவியதாக 8ம் தேதி அவர்களது நண்பர்களான அய்யம்பேட்டை காந்தி நகர் ஹேமதீபன் (19), பாரதிதாசன் நகர் கரண் (26), தஞ்சாவூர் கீழவாசல் கதிர்வேல் (25) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை வாகன சோதனையின்போது தனிப்படையினர் கைது செய்தனர்.
இதில் 17 வயது சிறுவனை தஞ்சாவூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் மீதமுள்ள 3 பேரை புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அய்யம்பேட்டை ராஜீவ் காந்தி நகர் ஜெ.சுந்தரேசன் (20), மதகடி பஜார் தெரு ரா.பரமேஸ்வரன் (20), வெள்ளான் செட்டித் தெரு சு.ராகுல் (18) ஆகியோர் ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி ராஜசேகரன் முன்னிலையில் 9ம் தேதி சரணடைந்தனர். 3 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இவர்களில் சுந்தரேசன் மீது கஞ்சா உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த நிலையில், சிவா மணிகண்டன் கொலை தொடர்பாக முதல் நாள் அளித்த புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்காத அய்யம்பேட்டை காவல் ஆய்வாளர் ரதிமதியை, தஞ்சை சரக டிஐஜி ஜியாஉல்ஹக், பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளதாக மாவட்ட காவல் அலுவலக போலீஸார் தெரிவித்துள்ளனர்.