டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு வழங்கிய உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் நேற்று தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிட கோரி, மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியிருந்ததாவது: மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி, நாயக்கர்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சுற்றி பல தசாப்தங்களாக சுரங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டு, மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், டங்ஸ்டன் சுரங்கம் தோண்டுவதற்கான டெண்டரை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர். அதை பரிசீலிக்க வேண்டும். எதிர்காலத்தில், இதுபோல மக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் அதன் அருகில் சுரங்கம் தோண்டுவது போன்ற திட்டங்களை தொடங்க கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அண்ணாமலை கூறியுள்ளதாவது: திமுக அரசின் தவறான, முழுமையற்ற தகவல்களால், மதுரை அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதுதொடர்பாக மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு கடிதம் எழுதியதோடு, தொலைபேசியிலும் பேசினேன். மக்களின் எதிர்ப்பு குறித்து கூறி, சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிடுமாறு கேட்டுக் கொண்டேன். இதையடுத்து, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிடுவது குறித்து பரிசீலிப்பதாக கிஷன் ரெட்டி உறுதி அளித்துள்ளார்.
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது குறித்து திமுக அரசு தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் மட்டுமே, இந்த சுரங்கம் அமைப்பது குறித்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது, பொதுமக்கள் எதிர்ப்பை அடுத்து, திமுக அரசு நாடகமாடுகிறது. பிரதமர் மோடியின் நல்லாட்சியில், விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளன. விவசாயிகள் நலனுக்கு எதிரான எந்த செயல்பாடுகளையும் பிரதமர் மேற்கொள்ள மாட்டார் என்பது உறுதி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.