கோவை: கடை வாடகைக்கு விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் வணிகர்கள் மனு அளித்தனர்.
வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடந்தது. கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மொத்தம் 440 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
முன்னதாக காடுவெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடியிருப்பு பகுதி அருகே மதுபான கடை திறக்க கூடாது என மனு அளித்தனர். தமிழ்நாடு வணிகள் சங்கங்களின் பேரவை கோவை மாநகர் மாவட்டம் சார்பில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கடை வாடகைக்கு விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் செயல்படும் தென்னைநார் தொழிற்சாலைகளில் பணியாற்றும் மலைவாழ் மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்வாதாரம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.