மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி அதிகரிக்கும் 'சாலை பார்க்கிங்': மாசி வீதிகளில் பல கி.மீ. தூரம் அணிவகுக்கும் கார்கள்!


மதுரை: மீனாட்சியம்மன் கோயிலில் விடுமுறை நாட்களில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலாப்பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் பாதுகாப்பு இல்லாமல் மாசி வீதிகளில் பல கி.மீ. தூரத்தில் வாகனத்தை நிறுத்தி செல்கின்றனர்.

உலக புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோயிலுக்கு விடுமுறை நாட்கள், விஷேச நாட்களில் பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் அதிகளவு திரள்கிறார்கள். கடந்த காலங்களில் பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள், ரெயில்கள், பஸ்களில் வந்து சென்றார்கள். தற்போது, பெரும்பாலான சுற்றுலாப்பயணிகள், பக்தர்கள் கார்கள், வேன்களில் வெளியூர்களில் இருந்து மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகிறார்கள். உள்ளூர் மக்களும் கூட குடும்பத்துடன் தரிசனத்திற்கு கார்களில் வருகிறார்கள். மிக குறைவானவர்களே, பேருந்துநிலையங்களில் இருந்து நடந்தும், இரு சக்கர வாகனங்களிலும், ஆட்டோக்களிலும் வருகிறார்கள்.

பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு பெரியார் பேருந்துநிலையம், மீனாட்சியம்மன் கோயில் வடக்கு ஆவணி மூல வீதி ஆகிய இடங்களில் மல்டிலெவல் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு ஆவணி மூலவீதி பல்லடுக்கு வாகன காப்பகத்தில் ஒரே நேரத்தில் 120 கார்கள், 1,400 இரு சக்கர வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி உள்ளன. ஆனால், பெரியார் பேருந்துநிலையம் மல்டி லெவல் பார்க்கிங் திறக்காததால் மீனாட்சியம்மன் கோயில் வடக்கு ஆவணி மூலவீதி பல்லடுக்கு பார்க்கிங் இடத்தில் போதுமான வாகனங்களை நிறுத்த முடியாமல் மீனாட்சிம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளார்கள்.

விஷேச நாட்கள் மட்டுமின்றி சனி, ஞாயிறு விடுமுறை நாட்களிலே பல்லடுக்கு வாகன காப்பகம் சிறிது நேரத்திலே 'ஹவுஸ் புல்' ஆகிவிடுகிறது. அதனால், சுற்றுலாப்பயணிகள், பக்தர்கள் தங்கள் கார்களை, மாசி வீதிகள், வெளி வீதிகளில் சாலைகளிலே நிறுத்தி செல்கிறார்கள். அதனால், இந்த சாலைகளில் வாகனப்போக்குவரத்து விடுமுறை நாட்களில் ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்து விடுகிறது. அவர்களை வாகனங்களை இந்த சாலையில் நிறுத்தக்கூடாது என்று போலீஸாரால் சொல்ல முடியவில்லை.

ஏனென்றால், கோவிலுக்கு வரக்கூடியவர்களுக்கு போதுமான பார்க்கிங் வசதி செய்து கொடுக்க முடியாததால் முன்பு அபராதம் விதித்த போலீஸார், தற்போது 'சாலை பார்க்கிங்'க்கை கண்டும் காணாமல் இருந்து விடுகின்றனர். மாசி வீதிகள், வெளி வீதிகளில் வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு வரும் வாகனங்கள் சில நேரங்களில் சாலைகளில் பார்க்கிங் செய்யப்படும் கார்களில் இடித்து சென்றுவிடுகின்றன.

அதனால், சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் கார்கள் சேதமடைந்து பாதிக்கப்படுகின்றனர். மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகிற பக்தர்கள், நிம்மதியை தேடியும், சுற்றுலாப்பயணிகள் கோவிலை சுற்றிப்பார்க்க குதூகலகமாகவும் வருகிறார்கள். ஆனால், அவர்களால் வாகனங்களை பார்க்கிங் செய்ய முடியாமல் கோயிலுக்குள் செல்லும்போது சோர்வடைந்து விடுகிறார்கள். விஐபிகள், அமைச்சர்கள், அதிகாரிகள் வாகனங்கள் தனிப்பாதையில் செல்வதால் அவர்களுக்கு மக்கள்படும் சிரமங்கள் தெரிவதில்லை. பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள பல்லடுக்கு வாகன காப்பகத்தை திறந்தால் ஒரளவு மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி பார்க்கிங் பிரச்சனையை குறைக்கலாம்.

x