சென்னையில் நடந்த ‘ரோபோடிக்ஸ்’ கண்காட்சி - இளம் திறமையாளர்களுக்கு ரஷ்ய துணை தூதர் முக்கிய தகவல்!


படங்கள் : எஸ்.சத்தியசீலன்

சென்னை: உலகளவில் பல்வேறு கல்லூரிகளுடன் இணைந்து இளம் திறமையாளர்களை கூட்டு ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக ரஷ்ய துணை தூதர் வலேரி கோட்சேவ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் சவுத்வெஸ்ட் மாநில பல்கலைக்கழகம் மற்றும் சென்னை ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம் சார்பில், 'ரோபோடிக்ஸ் மற்றும் புதுமையான கல்வி தொழில்நுட்பங்கள்' குறித்த நிகழ்ச்சி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்யன் கலாச்சார மையத்தில் இன்று நடைபெற்றது. ரஷ்ய துணை தூதர் வலேரி கோட்சேவ் தொடங்கி வைத்தார். உதவி துணை தூதர் அலெக்சாண்டர் டோடோனோவ் உடனிருந்தார். 250-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் ரஷ்யாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த விளக்கக்காட்சிகள், ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் குறித்த விரிவுரைகள் மற்றும் பயிலரங்கங்கள் நடத்தப்பட்டன. இதில் ரஷ்யாவின் சவுத்வெஸ்ட் மாநில பல்கலைக்கழகம், பெல்கோரோட் மாநில பல்கலைக்கழகம், அணு இயற்பியல் தொடர்பான ஸ்கோபெல்ட்சின் கல்வி நிறுவனம் ஆகியவற்றை சேர்ந்த 7 கல்வியாளர்கள் பங்கேற்று நவீன ரோபோக்களை எப்படி உருவாக்குவது, ரஷ்யாவில் ரோபோடிக்ஸ் கல்வியை தொடர கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட ‘ரோபோடிக்ஸ்’ கண்காட்சியில் இடம்பெற்ற நடமாடும் ரோபோ நாய், பார்வையாளர்களையும், மாணவர்களையும் வெகுவாக கவர்ந்தது. கொடுக்கப்படும் தரவுகளுக்கு ஏற்ப உடற்பயிற்சி செய்வது, வாலை ஆட்டிக்கொண்டு குறைப்பது, உட்கார்ந்து எழுவது, முன்கால்களை தூக்கி நிற்பது என சாதாரண நாய்கள் செய்யும் அனைத்தையும் செய்து காட்டி அசத்தியது. அதேபோல் நண்டு வகை ரோபோவும், ஸ்பைடர் ரோபோவும் கவனம் ஈர்த்தன.

இத்துடன் வி.ஆர் மூலம் ரஷ்யாவின் கல்வி மற்றும் கலாச்சாரம் தொடர்பான படங்கள் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டன. மேலும் வி.ஆர் மூலம் நடத்தப்பட்ட விளையாட்டுகளும் மாணவர்களை குஷிப்படுத்தின. இந்த நவீன வகை ரோபோக்களின் செயல்பாடு மற்றும் வி.ஆர் தொழில்நுட்பம் குறித்து ரஷ்ய நாட்டை சேர்ந்த கல்வியாளர்கள் மாணவர்களுக்கு விளக்கமளித்தனர். இந்த நிகழ்வின் தொடர்ச்சி, நாளை ஆவடியில் உள்ள வேல் டெக் நிகர்நிலை பல்கலைக்கழகத்திலும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, ரஷ்ய துணை தூதர் வலேரி கோட்சேவ் பேசியதாவது: ''ரஷ்ய அரசு தொடர்ந்து அறிவியல் தொழில்நுட்பத்தில் அதிக ஈடுபாடு காட்டிவருகிறது. மேம்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பங்களுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதையொட்டி உலகளாவிய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுடன் இணைந்து பொறியியல் தொடர்பான கூட்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்வதில் தனிக்கவனம் செலுத்தி வருகிறது. இதற்கான பட்ஜெட் ஒதுக்கீடும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இதுபோன்ற அறிவியல் நிகழ்ச்சிகளை முன்னெடுத்து பல்வேறு நாடுகளிலும், மாநிலங்களிலும் நடத்தி வருகிறோம். அதில் ஒன்றாக, அறிவியல் துறையிலும், பொறியியல் கல்விகளிலும் சிறந்து விளங்கும் தமிழகத்தையும் தேர்ந்தெடுத்துள்ளோம். இளம் திறமையாளர்களை கண்டறிந்து கூட்டு ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்துவதே எங்களது நோக்கம். அதற்கான முன்முயற்சிகளை எடுத்துவருகிறோம்.'' இவ்வாறு அவர் கூறினார்.

x