முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் திருமாவளவன்: இதுதான் காரணம்?


சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ஃபெஞ்சல் புயல் நிவாரணத்துக்காக விசிக எம்.பி., எம்எல்ஏக்களின் ஒரு மாத ஊதியத்தை அளித்தார்.

இது தொடர்பாக தமிழக முதல்வரின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், ‘ விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஒருமாத ஊதியமான ரூ. 10 இலட்சத்திற்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் திமுகவை விமர்சித்து விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியது பெரும் சர்ச்சைகளை உருவாக்கிய நிலையில், அவர் இன்று கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், ‘1. கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா அவர்கள் அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது. இது குறித்து கடந்த 07-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.

கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும்; அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால் கட்சியின் நலன் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும்; அவை கட்சி
மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.

இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு "தவறான முன்மாதிரியாக" அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது. இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், ஆதவ் அர்ஜூனா அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஆதவ் அர்ஜூனா அவர்கள் கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட சில மணிநேரங்களில் திருமாவளவன், முதல்வர் ஸ்டாலினை சந்தித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.

x