விருதுநகர்: நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் புதிதாக வாக்களிக்க உள்ள 20 சதவிகித வாக்காளர்களை நாம் தவறவிடக் கூடாது. அவர்களை நம்பக்கம் இழுக்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பாக விருதுநகரில் கட்சி நிர்வாகிகளுக்கான பயிற்சி பட்டறை மற்றும் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அதிமுக விருதுநகர் மண்டல தகவல் தொழில் நுட்பப் பிரிவு மண்டலச் செயலாளர் சரவணக்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் ராஜ்சத்யன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
அப்போது முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசுகையில், "இன்று அனைவரது கைகளிலும் செல்போன் உள்ளது. ஒரு கட்சியின் வெற்றியை நிர்ணயிக்க கூடிய இடத்தில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உள்ளது. தகவல் தொழில்நுட்பப் பிரிவு மூலம் தான் உடனடியாக தகவல்கள் மக்களிடம் சென்றடையும். நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் 20 சதவிதம் வாக்கார்கள் புதிதாக வாக்களிக்க உள்ளனர். அவர்கள் நம் இலக்கு. அவர்களை விட்டுவிடக் கூடாது.
அவர்களை நம் பக்கம் இழுக்க வேண்டும். திமுக கூட்டணியில் தீப்பற்றி எரிகிறது. கூட்டணியில் என்ன நடக்கும் என்றே தெரியவில்லை. உள் குத்து வெளி குத்து எல்லா குத்தும் திமுக கூட்டணியில் நடக்கிறது. எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு முன்னாள் முதல்வர் பழனிசாமி பொறுமையாக காய் நகர்த்தி வருகிறார் என்று கூறினார்.
அவரைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் ராஜ் சத்யன் பேசுகையில், ”அரசியல் வாதிகள் முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசுவார்கள். ஆனால், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசும் பேச்சு தான் முக்கிய கண்டன்ட்டாக தமிழக முழுவதும் பேசப்பட்டு வருகிறது” என்று ராஜ் சத்யன் கூறினார்.