சென்னை: மதுரை அரிட்டாபட்டி அருகே டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் இன்று அரசின் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதன்போது முதல்வருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது.
டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தும் தனித் தீர்மானம் குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 'இவ்விவகாரத்தில் திமுக அரசு, மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் கொடுக்கவில்லை. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் வந்தபோதே திமுக எம்.பி.க்கள் எதிர்த்திருக்கலாம். பிரதமருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை எங்களிடம் காட்டவில்லை” என குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாடாளுமன்றத்தில் கனிமவள மசோதா நிறைவேறும் போது, திமுக எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் தவறான தகவலை அவையில் பதிவு செய்யக் கூடாது. திமுக ஆதரவுடன் அந்த சட்டம் நிறைவேறவில்லை என்பதை அவர் தெரிந்துகொள்ள வேண்டும். டங்ஸ்டன் திட்டத்தைத் தடுத்தே தீருவோம். ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். நான் முதலமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டத்தை வரவிடமாட்டேன். ஒருவேளை டங்ஸ்டன் திட்டம் வந்தால் நான் முதல்மைச்ராக இருக்க மாட்டேன்” எனத் தெரிவித்தார். இதன் பின்னர் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான அரசின் தனி தீர்மானம் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் சட்டப்பேரவையில் நிறைவேறியது.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. இதனையடுத்து சட்டப்பேரவையில் அவை முன்னவர் துரைமுருகன், டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
அதில், “மதுரையில் அமையவுள்ள டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு அப்பகுதியையும், அப்பகுதியில் வாழும் மக்களையும் பாதுகாக்கும் பொருட்டு இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க ஒப்பந்த வழங்கிய மத்திய அரசின் நடவடிக்கையை கைவிடுமாறு தமிழக முதல்வர், பிரதமரிடம் ஏற்கெனவே வலியுறுத்தி உள்ளார்.
இந்த சூழ்நிலையில், மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் நாயக்கர்பட்டி கிராமத்தில் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்திடவும், மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமத்தையும் வழங்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.” என்றார்.