டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனே ரத்து செய்ய வேண்டும்: சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்!


சென்னை: மதுரை அரிட்டாபட்டி அருகே டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிமம் வழங்கக்கூடாது என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் இன்று அரசின் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. இன்று சட்டப்பேரவையில் அவை முன்னவர் துரைமுருகன், டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

அதில், “மதுரையில் அமையவுள்ள டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு அப்பகுதியையும், அப்பகுதியில் வாழும் மக்களையும் பாதுகாக்கும் பொருட்டு இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க ஒப்பந்த வழங்கிய மத்திய அரசின் நடவடிக்கையை கைவிடுமாறு தமிழக முதல்வர், பிரதமரிடம் ஏற்கெனவே வலியுறுத்தி உள்ளார்.

இந்த சூழ்நிலையில், மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் நாயக்கர்பட்டி கிராமத்தில் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்திடவும், மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமத்தையும் வழங்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.” என்றார். சட்டசபையில் இந்த தீர்மானம் மீது விவாதம் நடத்தப்பட்டது. அப்போது, இந்த தீர்மானத்தை வரவேற்று, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பேசினார். டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிரான இந்த தனித் தீர்மானத்திற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில், துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த ஜூன் 20 முதல் 29-ம் தேதி வரை 10 நாட்கள் நடத்தப்பட்டது. பேரவை விதிகளின்படி, ஒரு கூட்டம் முடிந்தால், அடுத்த 6 மாதங்களில் அடுத்த கூட்டம் நடத்த வேண்டும். அதன்படி, சட்டப்பேரவை கூட்டம் இன்று (டிச.9) காலை கூடியது. முதலில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள், பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. கோதண்டம், சுப்புராயர், முகமது கனி, தொழிலதிபர் ரத்தன் டாடா, சீதாராம் யெச்சூரி, முரசொலி செல்வம் உள்ளிட்டோருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

x