வங்க கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி: நாளை முதல் 13-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு


சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று, வரும் 11-ம் தேதி தமிழக கரையை நெருங்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் வரும் 13-ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது.

இது மேலும் வலுவடைந்து மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 11-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளை யொட்டி நிலவக்கூடும்.

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில், நாளை கடலோர மவாட்டங்களில் சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 11, 12-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும், 13-ம் தேதி தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் சில இடங்களிலும், 14-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். வரும் 11-ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள், காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 12-ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரியில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 13-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் டிச.8-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

x