தென் மாவட்டங்களுக்கு கோயம்பேடு, போரூர் சுங்கச்சாவடியில் இருந்து கிளாம்பாக்கம் வழியாக ஆம்னி பேருந்து இயக்கம்


சென்னை: தமிழகத்தின் தென் பகுதிகளுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு பணிமனை மற்றும் போரூர் சுங்கச்சாவடியில் இருந்து கிளாம்பாக்கம் வழியாக இயக்கப்படும் என்று உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை கிளாம்பாக்கம் அருகே முடிச்சூரில் ரூ.42.70 கோடியில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் இடத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 7-ம் தேதி திறந்து வைத்தார். இங்கு அதிகபட்சம் 150 பேருந்துகளை நிறுத்தலாம்.

கோயம்பேடு அருகே உள்ள டிராவல்ஸ் நிறுவனங்களின் பணிமனைகள் மற்றும் போரூர் சுங்கச்சாவடி அருகில் இருந்து தமிழகத்தின் தென் பகுதிகளுக்கான ஆம்னி பேருந்துகளை இயக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல, கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து ஈசிஆர் சாலை வழியாக புதுச்சேரிக்கும், பூந்தமல்லி சாலை வழியாக கிருஷ்ணகிரி, பெங்களூருவுக்கும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. மேலும், கிளாம்பாக்கத்தில் தமிழக அரசால் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம், அப்பகுதி மட்டுமின்றி, ஈசிஆர் பகுதியை சேர்ந்த பயணிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.

தவிர, மின்சார ரயில், மெட்ரோ ரயில் இணைப்பு உள்ள பயணிகளுக்கும் இது வசதியாக உள்ளது. சென்னையில் இருந்து புறப்படும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி 20 சதவீதத்துக்கு மேற்பட்ட பயணிகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஏற்றி செல்கிறோம்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை, தமிழகத்தின் தென் பகுதிகளுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு அருகே உள்ள டிராவல்ஸ் நிறுவனங்கள் மற்றும் போரூர் சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் இருந்து கிளாம்பாக்கம் வழியாக இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x