திருமாவளவன், ஆதரவ் அர்ஜுனா நாடகமாடுகிறார்களா? - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி


கோவை: திமுகவுக்கு எதிரான வாக்குகளைப் பிரிக்க திருமாவளவன், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சேர்ந்து நாடகமாடுகிறார்களா என்று சந்தேகம் எழுந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

கோவையில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை நேற்று கூறியதாவது: அம்பேத்கர் புத்தகம் வெளியீட்டு விழாவில் ஆனந்த் டெல்டும்பே என்ற `அர்பன் நக்சல்' முக்கிய விருந்தினராகப் பங்கேற்றுள்ளார். அவரது தம்பி மிலிந்த் 2021-ல் மகாராஷ்டிராவில் நக்சல்களுடன் ஏற்பட்ட சண்டையின்போது சுட்டுக் கொல்லப்பட்டவர். தமிழகத்தில் நக்சல் ஆதிக்கம் கொண்டுவர முயற்சிக்கிறார்களா?

லாட்டரி அதிபரின் மருமகன் ஆதவ் அர்ஜுனா முன்பு சபரீசனுக்கு நெருக்கமாக இருந்தவர். தற்போது விசிகவுக்கு நிதி அளிப்பவராக இருக்கிறார். அவர், புத்தக வெளியிட்டு விழாவில் பாஜக குறித்துப் பேசியுள்ளார். இந்த விழாவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் செல்லவில்லை. துணைப் பொதுச் செயலாளர் சென்றுள்ளார். எனவே, விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் வசம் உள்ளதா அல்லது துணைப் பொதுச் செயலாளர் வசம் உள்ளதா?

மேடையில் கூட்டணி கட்சி குறித்து பேசிய பிறகும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, லாட்டரி விற்பவரின் கட்டுப்பாட்டில் கட்சி உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

அம்பேத்கரை வைத்து அரசியல் வியாபாரம் செய்கின்றனர். புத்தக வெளியீட்டு விழாவில் மணிப்பூர் குறித்து பேசியுள்ளார் விஜய். அவர் மணிப்பூர் செல்லத் தயாராக இருந்தால், நானே அழைத்துச் சென்று, அங்குள்ள நிலையைக் காட்டுகிறேன். மணிப்பூர் நிலவரும் குறித்து முழுவதும் அறிந்து கொண்டுதான் பேச வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு திரிபுரா, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் சிறப்பு ஆயுத சட்டத்தை திரும்பப் பெற்றுள்ளோம். வடகிழக்கு மாநிலங்களில் அனைத்துப் பிரச்சினைகளையும் பாஜக சரியாக கையாண்டுள்ளது.

கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் அதிகமுள்ள மாநிலங்களில் பாஜக ஆட்சி நடத்துகிறது. தமிழகத்தில் பாஜகவை இந்துத்துவா கட்சி என்கின்றனர். பட்டியலின மக்கள் பாஜகவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

லாட்டரி அதிபர் மருமகனைப் பற்றி கருத்து கூறும் அளவுக்கு பாஜக தரம் தாழ்ந்து போகவில்லை. அவர் என்ன காந்தியவாதியா? கட்சி மாறும் அரசியல்வாதிகள் குறித்தெல்லாம் பதில் சொல்லி எங்கள் தரத்தை தாழ்த்திக் கொள்ள வேண்டுமா? தமிழகத்தில் மன்னராட்சியை கொண்டுவர துணையாக இருந்தது யார்?

திமுக தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்காக, அதிருப்தி வாக்குகளைப் பிரிக்க திமுக சதி செய்கிறதா? திமுகவுக்கு எதிரான வாக்குகளைப் பிரிக்க திருமாவளவன், ஆதவ் அர்ஜுனா சேர்ந்து நாடகமாடுகிறார்களா என்று சந்தேகம் எழுந்துள்ளது. துப்பாக்கி ஏந்தியவர்கள் மேடையில் பேசும் அளவுக்கு அரசியல் தரம் தாழ்ந்துவிட்டதா? தமிழகத்தில் நடப்பது குடும்ப ஆட்சி. இந்த ஆட்சியை அகற்ற பாஜக பாடுபடும். எதையும் ஆதாரத்தின் அடிப்படையில் பேச வேண்டும். வாய்க்கு வந்ததை பேசக் கூடாது. வேண்டாம்.

ஜாமீனில் உள்ள அமைச்சர்கள் குறித்து நான் பேச விரும்பவில்லை. நான் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்றபோது, ஜாமீன் அமைச்சர் புழல் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருந்தார். எனது கருத்துகள் தவறு என்று கருதினால், வழக்கு போட்டுக் கொள்ளட்டும். அமலாக்கத் துறை வழக்கில் அவரது சகோதரரை இன்னும் தேடி வருகின்றனர். அவரைப் பிடித்துக் கொடுக்க வேண்டிய பொறுப்பு தமிழக காவல் துறைக்கு உள்ளது. நான் உருட்டல், மிரட்டல்களுக்கு ஒருபோதும் பயப்பட மாட்டேன். ஆரோக்கியமான அரசியல் செய்யவே வந்துள்ளேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

x