விசிக நலனுக்கு எதிராக செயல்படும் ஆதவ் அர்ஜுனா: கட்சியின் நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளதாக திருமாவளவன் தகவல்


மதுரை: விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் அண்மைக்கால செயல்பாடுகள் கட்சியின் நலனுக்கு எதிராக இருக்கிறது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.

மதுரை வெளிச்சநத்தம் பகுதியில் 43 அடி கொடிக் கம்பத்தில் விசிக தலைவர் திருமாவளவன் கட்சிக் கொடியேற்றினார். தொடர்ந்து, பரவையில் நடந்த கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்றார். முன்னதாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தேசிய அளவில் இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. புதிய கூட்டணியில் இடம்பெற வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. திமுக கூட்டணியை சிதறடிக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் சதித் திட்டமாகும். இந்தக் கூட்டணி தொடர் வெற்றியை பெறக்கூடாது என்பதே அதிமுக, பாஜகவின் நோக்கமாக உள்ளது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியை கருவியாகப் பயன்படுத்தலாம் என சிலர் முயற்சிக்கின்றனர்.

விக்கிரவாண்டி மாநாட்டில் திமுக அரசை முதன்மை எதிரி என விஜய் வெளிப்படையாக அறிவித்த நிலையில், நானும், அவரும் நூல் வெளியீட்டு விழாவில் அரசியல் பேசாமல் இருந்தாலும், அதை அரசியலாக்குவர். இதற்காக பலர் காத்திருக்கின்றனர். விஜய் மீது எனக்கு எந்த சங்கடமும் இல்லை. அவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி.

விசிகவில் உள்ள துணைப் பொதுச் செயலாளர்கள் 10 பேரில் ஒருவர் ஆதவ் அர்ஜுனா. ஒருவர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறும்போதும், கட்சிக்கு ஊறுவிளைவிக்கும் விதமாக செயல்படும்போதும், தலைவர், பொதுச் செயலாளர் அடங்கிய உயர்நிலைக் குழுவில் விவாதிக்க வேண்டும் என்பது எங்கள் கட்சியின் நடைமுறை. குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலித் அல்லாதவர்கள் எந்தப் பொறுப்பில் இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்றால் உயர்நிலைக் குழு கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, குற்றச்சாட்டுகள் குறித்து ஆராயப்படும்.

ஆதவ் அர்ஜுனாவின் அண்மைக்கால செயல்பாடுகள் கட்சி நலன்களுக்கு எதிராக இருக்கின்றன என்று கட்சி முன்னணி நிர்வாகிகள், தலைமையின் கவனத்துக்கு கொண்டு வந்திருகின்றனர். இதுகுறித்து விவாதித்துள்ளோம். விரைவில் தலைமையின் முடிவை தெரிவிப்போம். என்னை கட்டுப்படுத்தி இயக்க யாரும் முயற்சிக்கவில்லை. அதற்கான சூழலும் இங்கில்லை. இவ்வாறு அவர் கூறினார்

x