மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை 2027 பிப்ரவரிக்குள் முடிக்க இலக்கு: ஆர்டிஐ தகவல்


மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை 2027-ம் ஆண்டு பிப்ரவரிக்குள் முடிக்க இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது.

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடர்பாக, தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த சமூகநல ஆர்வலர் பாண்டியராஜா, மதுரை எய்ம்ஸ் மத்திய பொது தகவல் அலுவலரிடம் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு எய்ம்ஸின் பொது தகவல் அலுவலர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான ஒப்பந்தத்தின்படி, தற்போது மருத்துவ கல்விசார் கட்டிடம், நர்சிங் கல்லூரி, மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிகள், உணவுக் கூடம், வெளிநோயாளிகள் பிரிவு, சேவைப் பிரிவு கட்டிடங்கள் ஆகியவற்றுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மதுரை எய்ம்ஸ் திட்ட மதிப்பீடு ரூ.2,021.51 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு, 33 மாதங்களில் மொத்த பணிகளையும் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2,18,927 ச.மீ. பரப்பளவில் மருத்துவமனை கட்டிடங்கள், மருத்துவக் கல்லூரி கட்டிடங்கள், விடுதிக் கட்டிடங்கள், ஆசிரியர் குடியிருப்புகள், உணவகங்கள், விளையாட்டுக் கூடங்கள் கட்டப்பட இருக்கின்றன.

தற்காலிக கட்டிடங்களாக திட்ட அலுவலகம், சேமிப்புக் கிடங்குகள், கான்கிரீட் தயாரிப்பு ஆலை, மெடிக்கல் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான கட்டிடங்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூகநல ஆர்வலர் பாண்டியராஜா கூறும்போது, "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கென பிரத்யேகமாக ஆர்டிஐ இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் முதல்முறையாக எழுப்பிய கேள்விகளுக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் பதில் அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அதில் தெரிவித்துள்ள தகவலின்படி, 2027 பிப்ரவரிக்குள் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் முழுவதும் முடிவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கட்டுமானப் பணிகளை குறித்த காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்" என்றார்.

x