புதுச்சேரிக்கு ரூ.600 கோடி நிவாரண நிதியை உடனடியாக வழங்க மத்திய குழுவிடம் திமுக மனு


புதுச்சேரி: புதுச்சேரி அரசு கோரியுள்ள நிவாரண நிதியான ரூ. 600 கோடியை உடனடியாக அளித்து புதுச்சேரி பகுதியை மீட்டெடுக்க வேண்டும் என மத்திய குழுவிடம் திமுக வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயல் மழை வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். முள்ளோடை துணைமின் நிலையத்தில் ஆய்வு செய்த மத்திய அரசின் உள்துறை அமைச்சக பேரிடர் மேலாண்மைப் பிரிவின் இணைச் செயலர் ராஜேஷ்குப்தாவிடம் புதுச்சேரி எதிர்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், திமுக எம்எல்ஏக்கள் அனிபால்கென்னடி, செந்தில்குமார், சம்பத் ஆகியோர் புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்து, முழுமையான ஆய்வு நடத்தி, பேரிடரில் சிக்கிய புதுச்சேரியை மீட்டெடுக்க புதுச்சேரி அரசு கோரியுள்ள முதல்கட்ட பேரிடர் அவசரகால நிதியை மத்திய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தனர்.

இந்த புயல் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியத்தியங்களில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மாநிலத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிப்பு செய்ய வேண்டும். பேரிடர் நிவாரண நிதியை கூடுதலாக பெற்று சிதைந்த புதுச்சேரியை மீட்டெடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாராளமாக நிவாரண நிதி வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் புதுச்சேரியை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவித்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கார்டுக்கு ரூ. 5 ஆயிரம் உள்ளிட்ட நிவாரண உதவிகளை அறிவிப்பு செய்து, அதற்கு தேவையான பேரிடர் நிதி புதுச்சேரி அரசு வசம் இல்லாததை சுட்டிக்காட்டி, புதுச்சேரிக்கு முதல் கட்டமாக ரூ. 600 கோடியை பேரிடர் நிதியாக அளிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

புதுச்சேரி மாநிலம் கடந்த 15 ஆண்டுகளாக இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. 2008 நிஷா புயலுடன் தொடங்கி, 2011–ல் தானே புயல் மூலம் தனது கோரத்தாண்டவத்தை புதுச்சேரியில் அரங்கேற்றயது. அதன் பிறகு நீலம், மடி, வர்தா, ஒக்கி, கஜா, நிவர், தற்போது ஃபெஞ்சல் புயல் என தொடர்ந்து இயற்கை பேரிடரை புதுச்சேரி சந்தித்து வருகிறது.

இந்த இயற்கை பேரிடரின்போது உதவிக்கரம் நீட்ட வேண்டிய ஒன்றிய அரசு கடந்த காலங்களில் மாற்றாம்தாய் மனதுடன் உதவாமல் புதுச்சேரியை புறக்கணித்தது. தற்போது அதுபோல் இல்லாமல் தாராளமாக நிதி அளித்து பாதிக்கப்பட்ட புதுச்சேரி மக்களின் கண்ணீரை துடைக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.

ஆகவே, புதுச்சேரி அரசு கோரியுள்ள நிவாரண நிதியான ரூ. 600 கோடியை உடனடியாக அளித்து புதுச்சேரி பகுதியை மீட்டெடுக்க வேண்டும். இதற்கு இக்குழு சாதகமான உண்மையான சேத அறிக்கையை மத்திய அரசுக்கு அளிக்கும் என்றும் நம்புகிறோம் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

x