மதுரை: அமைச்சரிடம் புகாரளிக்க சென்ற முன்னாள் அதிமுக எம்எல்ஏ தரப்பினர் கைது


மதுரை: மதுரையில் காவல்துறை வழக்கு தொடர்பாக அமைச்சர் பி. மூர்த்தியிடம் புகார் அளிக்கச் சென்ற முன்னாள் அதிமுக எம்எல்ஏ தரப்பினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டம், எம். சத்திரப்பட்டி அருகிலுள்ள கருவனூரைச் சேர்ந்தவர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்னம்பலம். இவரது தரப்பினரும், அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே கோயில் திருவிழாவில் முதல் மரியாதை பிரச்சினையில் கோஷ்டி மோதல் நடந்தது. இது தொடர்பாக இருதரப்பினர் மீதும் எம்.சத்திரபட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இவ்வழக்கில் நீதிமன்ற நிபந்தனையின்பேரில், பொன்னம்பலம் மகன் திருச்சிற்றம்பலம் எம். சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். கடந்த 7ம் தேதி காவல் நிலையத்திற்கு கையெழுத்திட சென்றார். அப்போது, திருச்சிற்றப்பலத்திற்கும், மற்றொரு தரப்பைச் சேர்ந்த வேல்முருகன் உள்ளிட்டோருக்கும் இடையே காவல் நிலைய வாசலில் வைத்து தகராறு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து திருச்சிற்றம்பலம் புகாரில் வேல்முருகன் மற்றும் அவரது தரப்பினர் கலை வண்ணன், அருண், ஆனந்த், சங்கர் உட்பட 7 பேரும், மற்றொரு தரப்பைச் சேர்ந்த ராஜ்மோகன் புகாரில் திருச்சிற்றம்பலமும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், காவல்துறை வழக்கு தொடர்பாக முன்னாள் எம்எல்ஏ தரப்பை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என சுமார் 50 பேர் மதுரை அய்யர் பங்களா பகுதியில் உள்ள அமைச்சர் பி மூர்த்தியின் வீட்டுக்கு சென்று அவரிடம் வேல்முருகன் தரப்பினருக்கு எதிராக நேரில் முறையிட சென்றுள்ளனர்.

தல்லாகுளம் காவல் ஆய்வாளர் ஜான்பிரிட்டோ உள்ளிட்ட போலீஸார், அவர்களை தடுத்து கைது செய்தனர். போலீஸார் தரப்பில் கூறுகையில், ”கடந்த 7ம் தேதி கருவனூரில் நடந்த சம்பவம் குறித்து அமைச்சரிடம் நேரில் புகார் அளிக்க வாகனங்களில் அமைச்சர் வீட்டுக்கு வந்தனர். அமைச்சர் வீட்டில் இல்லை, அவர் வந்த பிறகு வாருங்கள் என அறிவுறுத்தினோம். ஆனாலும் அவர்கள் மறுத்து போராட்டத்திற்கு முற்பட்டதால் வேறு வழியின்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை கைது செய்தோம். மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்” என்றனர்.

x