ராஜபாளையம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியை உடைக்கும் நிலைக்குகூட திமுக செல்லும் என்பதால், திருமாவளவன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என, அதிமுக இளைஞர் பாசறை மாநிலச் செயலாளர் பரமசிவம் பேசினார்.
ராஜபாளையத்தில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி, நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக இளம் பெண்கள் பாசறை மாநிலச் செயலாளர் பரமசிவம் பேசுகையில், “கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக தோற்றதற்கு முக்கிய காரணம் அதிமுக நிர்வாகிகளின் வீட்டு இளம் வாக்காளர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லை.
ஒவ்வொரு அதிமுக நிர்வாகிகளும் தங்கள் வீட்டின் இளம் வாக்காளர்களுக்கு அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, அவர்களை நமது இயக்க பணிக்கு அழைத்து வர வேண்டும். தனியார் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் விஜய் கட்சி திமுகவின் 47 சதவீத வாக்குகளை பிரிக்கும் என தனியார் நிறுவனம் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளதால் திமுக அமைச்சர்கள் அச்சத்தில் உள்ளனர்.
விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா 2026-ல் மன்னராட்சியை ஒழிப்பதை இலக்கு என்கிறார். அவரது பேச்சு குறித்து விளக்கம் கேட்டிருப்பதாக திருமாவளவன் அறிக்கை வெளியிட்ட பின்னரும் ரவிக்குமார், ஆளூர் ஷாநவாஸ் போன்ற இரண்டாம் கட்ட தலைவர்கள் திமுகவிற்கு ஆதரவாக வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திருமாவளவன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். விசிக கட்சியை உடைக்கும் நிலைக்குகூட திமுக செல்லும். நீங்கள் யாரை எதிர்பார்க்கிறீர்களோ அவர்கள், அதிமுக கூட்டணிக்கு வருவார்கள். இன்னும் 3 மாதங்களில் இனிய செய்தி உங்களுக்கு வரும்” என்றார்.